2025 ஜூலை 19, சனிக்கிழமை

’நடைமுறையை மீறினால் நிலைமை மேலும் மோசமாகும்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி ஒன்றுகூடினால், தொற்றாளர்களின்  எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், தடுப்பூசி பெற்றவர்களாக இருந்தாலும், சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமாகும் எனவும், அவர் கூறினார்.

 யாழ்ப்பாணத்தில், இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாணத்தில், தற்போது வரை  36 ஆயிரத்து 356 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு உள்ளனர் எனவும்  இறப்புகளை பார்த்தால் வடக்கு மாகாணத்தில் இன்று வரை 753 இழப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் கூறினார்.

 அதிலே ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 208 இறப்புகள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்த அவர், ஏனைய மாவட்டங்களை போல வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதம்  தொடக்கம் செப்டெம்பர் வரை இறப்புகளும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்பட்டது எனவும் கூறினார்.
 
இந்தக் காலப்பகுதியில், இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வற்கு இடர்நிலை காணப்பட்டது எனத் தெரிவித்த அவர், "இந்தக் காலப்பகுதியில் 101 சடலங்களை மின் தகனத்துக்காக வெளிமாவட்டத்துக்கு அனுப்பியிருந்ததாகவும் தற்போது அந்த நிலை மாறி இருப்பதாகவும் கூறினார்.

செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் தொற்றாளர்களின்  எண்ணிக்கையிலும் இறப்புக்கள் எண்ணிக்கையிலும்  வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும், அவர் கூறினார்.

"நாடு முழுவதிலும் பொதுவாக குறைந்துள்ளது. தற்போது வடமாகாணத்தில் இந்தச் சடலங்களை தகனம் செய்ய கூடியதாக நிலை காணப்படுகின்றது. எனினும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளது.

"எனவே, பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி ஒன்றுகூடினால், தொற்றாளர்களின்  எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

 "இந்த நோய்த் தொற்றானது பூரணமான கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, இந்த நடைமுறையை  தொடர்ந்து செயற்படுத்துவது சிறந்தது" எனவும், கேதீஸ்வரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X