2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

நல்லூர் சூட்டுச் சம்பவம்:‘நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால்’

Yuganthini   / 2017 ஜூலை 24 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்  
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், குறித்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.சபூர்தின் தெரிவித்தார்.  

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து, மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணிகள், மன்றுக்குச் செல்லாது பணிப்பகிஷ்கரிப்பை இன்று (24) மேற்கொண்டனர்.  

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து குறிப்பிட்ட அவர், “குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், துக்ககரமானதும் ஏற்றுக்கொள்ள முடியாத தொன்றாகும். நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள சவாலாகவும், சுதந்திரமான நீதித்துறையை நடாத்த விடாமல் தடுக்கின்ற ஒரு நிகழ்வாகவும், இதை நாங்கள் பார்க்கிறோம்.  

“நடந்த சம்பவத்தை அவதானிக்கின்ற போது, பொலிஸார் அவசரப்பட்டு, முரண்பாடான அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.  

“குறித்த தாக்குதல் சம்பவம் நீதிபதி இளஞ்செழியன் அவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இல்லை என அவர்கள் தெரிவித்த கருத்தை, மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக, வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதனை நாங்கள் ஏற்பதற்குத் தயாராக இல்லை. உரிய முறையில் விசாரணை செய்து, உரிய கண்டுபிடிப்புக்களின் மூலமாக, குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், நீதியின் முன் கொண்டு வரப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.  

“அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம் பெறுகின்ற வழக்குகள் சம்பந்தமாக, ஒரு பதற்றமான ஒரு சூழலில் பலர் கைது செய்யப்பட்டு, யாழ். நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற சந்தர்ப்பத்தில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

“யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், மிகவும் துணிச்சல் மிக்க ஒரு நீதிபதியாகக் கடமையாற்றுகின்றார். அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துன்பகரமான குறித்த சம்பவம், ஏன் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பில் உரிய முறையில் கண்டுபிடிக்கப்பட வேண்டியது, நீதித்துறை, சட்டத்துறை, அரசாங்கம் ஆகியவற்றின் கடமையாகும்” என்று தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X