2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நாகர்கோவில் படுகொலை நினைவு நிகழ்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உட்பட 39 பேரின் 23ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது.

இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மகாவித்தியாலத்தியில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக அமைக்கப்படுள்ள நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் இலங்கை விமானப்படையின் புக்காரா விமானத்தால் கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுவீச்சில் 21 மாணவர்கள் பலியாகினர். 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுக்குள்ளாகினர்.

விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் பயத்தினால் ஒரு மரத்தின்கீழ் நின்றவேளை மரத்தின்மீது விழுந்த குண்டினால் அந்த இடத்திலேயே 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். இவர்கள் அனைவரும் 6-16 வயதுக்குட்பட்ட மாணவர்களே.

மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சங்கரப்பிள்ளை திரவியராசா தலைமையில் இன்று நடைபெற்ற இந்நினைவுகூரல் நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X