2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

பதவி விலகினார் ஆர்னோல்ட்

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த், எஸ். நிதர்ஷன், டி. விஜிதா 

யாழ். மாநகர சபைத் தேர்தலில் போட்டி இடுவதற்காக, இமானுவேல் ஆர்னோல்ட், வடமாகாண சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரியவருகிறது. 

இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ். மாநகர முதல்வராக, வடமாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக, அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீடுகள் மற்றும் வேட்பாளர் தெரிவுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பாரிய விரிசல் நிலை ஏற்பட்டிருந்தது. 

அந்த விரிசல்களின் மத்தியில், யாழ். மாநகர முதல்வராக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில், வித்தியாதரனுக்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருந்தும், வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தான் முதல்வர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அவர் அதனை மறுத்திருந்தார். 

இந்நிலையில், யாழ். மாநகரசபை முதல்வராகப் போட்டியிடுவதற்கு, ஐந்து பேரின் பெயர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடத்தில் பரிந்துரைக்கப்பட்டன. அதில், வடமாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக, வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் கருத்துத் தெரிவித்ததாவது, 

“கட்சியின், உயர்மட்டத் தலைவரது அறிவுறுத்தல்களின் பிரகாரம், சகல விடயங்களும் மாநகர முதல்வராகப் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த 14ஆம் திகதி, வடமாகாண அவைத்தலைவரிடம் இராஜினாமாக் கடிதத்தை வழங்கினேன். மேலும், கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் உத்தியோகபூர்வ அறிவித்தலுக்காகக் காத்திருக்கிறேன்” அவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், ஆர்னோல்டின் இராஜிநாமா, உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சி.வி.கே.சிவஞானம், அதை பேரவைச் செயலகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் செயலகத்தால் தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .