2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘பதின்ம வயது தம்பதியருக்கு எதிராக நடவடிக்கை’

Editorial   / 2018 செப்டெம்பர் 29 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுமென, யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

 யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று (28) நடைபெற்றது. இதன்போதே, பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

குறித்த கூட்டத்தில், யாழ். மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பொலிஸார்,

“யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளும் 18 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

“அதற்கு சட்டத்தில் இடமில்லை. அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கின்றது.

“யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் அனைத்திலும் பதின்ம வயதுத் திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

“பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்த பதின்ம வயதினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸார் உறுதியளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .