2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பயணிகளை நட்டாற்றில் விட்ட பஸ்

Princiya Dixci   / 2022 ஜூலை 26 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

பருத்தித்துறை தனியார் பஸ் சங்கத்தினர் தம்மை நட்டாற்றில் விட்டுச் சென்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் மற்றும் தனியார் பஸ் சங்கத்தினர் உள்ளிட்டோர் நேற்று (25) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக நேற்று முன்தினம் இரு தரப்பினரும் அறிவித்திருந்தனர்.

எனினும், பருத்தித்துறை தனியார் பஸ் சங்கத்தினர் (750 சாலை வழித்தட) பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான தமது சேவையை நேற்றுக் காலை நடத்தினார்.  

தாம் டீசல் கோரிப் போராடிய போது, தமக்கு ஆதரவாக மற்றைய சங்கங்கள் போராடவில்லை என்றும், அதேவேளை தமக்கான டீசலை பருத்தித்துறை (டிப்போ) வழங்குவதாகவும் தெரிவித்து, அவர்கள் சேவையில் ஈடுபட்டனர்.

அதனால் வடமராட்சி பக்கங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு, வேலை நிமிர்த்தம் மற்றும் சிகிச்சைகளுக்காக எனப் பலரும் வந்திருந்தனர்.

இந்நிலையில், திடீரென பருத்தித்துறை தனியார் பஸ் சங்கத்தினர் தமது சேவையை இடைநிறுத்தினர்.

தமக்கு ஏனைய சங்கங்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டமையாலும், தாம் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட்டால், தமது பஸ்களுக்கு பாதிப்பு ஏற்படுமென தாம் சேவையில் இருந்து விலகுவதாக  அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் இவர்களை நம்பி இவர்களின் பஸ்களில் யாழ்ப்பாணம் வந்தவர்கள் திரும்பிச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

யாழில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பருத்தித்துறைக்கு சொல்வதாயின் தற்காலத்தில் ஓட்டோ சாரதிகள் சுமார் 15,000 ரூபாய் வரையில் கட்டணமாக அறவிடுவார்கள். அதனால் அவர்கள் வேறு போக்குவரத்து மார்க்கங்கள் இன்றி, யாழ் நகரில் தவித்து நின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X