2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘பிரச்சினைக்குத் தீர்வு காண திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’

Editorial   / 2017 ஜூன் 17 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தற்போது எழுந்துள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமாயின், உங்களது விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்கள் தொடர்பில் தேவையான உடனடித் திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்க அனுப்பியுள்ள கடிதத்திலேயெ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“தங்களால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு நான்கு அமைச்சர்கள் தொடர்பில் தமது விசாரணைகளை நடாத்தியிருந்தது.  விசாரணையைப் பூர்த்தி செய்து அவர்களது அறிக்கையை உங்களுக்குச் சமர்ப்பித்திருந்தார்கள்.  இதில் இருவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ள அதேவேளை,  ஏனைய இருவரும் குற்றவாளிகளாகக் காணப்படவில்லை.

“விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீங்கள் செயற்படப்போவதாக மாகாண சபையில் தெரிவித்திருந்தீர்கள். குற்றவாளிகளாகக் காணப்பட்ட இரண்டு அமைச்சர்களையும் இராஜினாமா செய்யுமாறு நீங்கள் கோரிக்கை விடுத்திருந்தீர்கள்.  அந்தத் தீர்மானத்துக்கு எவரும் முறைப்பாடு தெரிவிக்கவில்லை.

“விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக  நீங்கள் எடுத்த நடவடிக்கை தொடர்பிலேயே முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கையானது இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு முரணானதும் பொருத்தமற்றதாகவுமே பார்க்கப்படுகின்றது. 

“13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, நான் தங்களுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசியபோது இத்தகைய நடவடிக்கை குற்றவாளிகளாகக் காணப்படாத  இரண்டு அமைச்சர்களினாலும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களாலும் எதிர்க்கப்படக்கூடும் எனவும் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறும் கூறியிருந்தேன்.

“அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களோடு இந்த விடயம் தொடர்பில் நீங்கள் பேசியிருந்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சேனாதிராஜாவோடு இந்த விடயம் தொடர்பில் நீங்கள் கலந்துரையாடாமை தொடர்பிலும் எனது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தேன். 

“அதன் பின்னர், அன்று நீங்கள் அவரோடு உரையாடியபோது குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்பதனை உங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

“14ஆம் திகதி புதன்கிழமை, குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்களுக்கு எதிராகவும் தண்டனை நடவடிக்கையை அறிவித்திருந்தீர்கள்.  அதற்குப் பிற்பாடு இடம்பெற்றவை எல்லாமே நீங்கள் மேற்கொண்ட மேற்குறித்த நடவடிக்கையின் விளைவேயாகும்.

“இச்சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனில், முதலில் குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்கள் தொடர்பில் தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

“அவசியமற்ற நடவடிக்கைகள் ஒற்றுமையின்மையை ஊக்குவிப்பதாகவும் வடமாகாண சபையின் நடவடிக்கைகளைப் பாதிப்பதாகவும் அமைந்துவிடக் கூடாது.

“எனவே, உங்களது விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்கள் தொடர்பில் தேவையான உடனடித் திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.  இது, நீங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாது என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X