2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்காக, கோட்டா அரசாங்கத்துக்கு 2/3ஐ வழங்க தயார்’

Editorial   / 2020 ஜூன் 12 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா, எஸ்.நிதர்ஷன்

 

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் அரசமைப்புச் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்துக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று, அக்கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அந்த ஆதரவு, புதிய அரசமைப்புச் சீர்த்திருத்தத்துக்கான ஆதரவாக இருக்குமே தவிர, அரசாங்கதுக்கான ஆதரவாக அமையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய வீட்டில், நேற்று (11) காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், “நாங்களாக ஓர் அரசாங்கத்தைக் கொண்டுவந்த போதுகூட, அரசாங்கத்துடன் சேர்ந்து ஆதரவளித்திருக்கவில்லை. ஆனால், எங்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நாங்கள் நீண்ட தூரம் பயணித்திருக்கின்றோம். குறிப்பாக, நகல் வரைபுகூட நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“இவ்வாறான சூழ்நிலையில், அதனை நிறைவுக்குக் கொண்டுவருவதற்கு, அரசாங்கத்துக்கு 3இல் 2 பெரும்பாண்மை வாக்குகள் தேவைப்பட்டால், அந்தத் தீர்வானது தமிழ் மக்களின் அபிலாஷைகளைச் சந்திப்பதாக இருந்தால், நிச்சையமாக ஆதரவைக் கொடுப்போம். இதனை நான் நாடாளுமன்றத்திலும் சொல்லியிருந்தேன்” என்றும் அவர் கூறினார்.

புதிய அரசமைப்பை உருவாக்கப் போவதாக, ஜனாதிபதி கூறியிருந்தார் என்றும் தாங்கள் அரசமைப்பு வரைபுகளைச் செய்தபோது குறிப்பிட்டிருந்த 3 விடயங்களை, ஜனாதிபதியும் தனது உரையில் சொல்லியிருந்தார் என்றும் குறிப்பிட்ட சுமந்திரன், ஆகவே இது விடயத்தில், ஆரம்பத்திலிருந்து தொடங்கத் தேவையில்லை என்றும் நகல் வரைபை வைத்தே, தேவையான மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்றும், இது தொடர்பில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கூறியுள்ளாரென்றும் எடுத்துரைத்தார்.

“அண்மையில் பிரதமரைச் சந்தித்த போது, மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை கிடைக்காது. ஆனாலும், இதய சுத்தியோடு புதிய அரசமைப்பைக் கொண்டுவரும் போது, அது ஜனநாயக அடிப்படையிலான அரசமைப்பாக இருக்க வேண்டும். அதிலே, தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலே ஏற்பாடுகள் இருக்குமாக இருந்தால், அந்த அரசியல் சீர்திருத்தத்தை வரைவதற்கும் அதை நிறைவேற்றுவதற்கும், கூட்டமைப்பின் முழுமையான ஆதரவை கொடுப்போம்” என்றும், சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X