2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரின் சூட்டில் பலியான இளைஞனின் இறுதிக் கிரியைகள் அமைதியாக நடைபெற்றன

Editorial   / 2017 ஜூலை 11 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. மகா

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் அமைதியான முறையில் இன்று இடம்பெற்றன.

6ஆம் கட்டை மணற்காட்டுப் பகுதியில், அனுமதியற்ற முறையில், மணலை கன்ரர் ரக வாகனத்தில், ஞாயிற்றுக்கிழமை ஏற்றிச் சென்றபோது, பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த வாகனம் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்றுள்ளது இதனையடுத்தே, பொலிஸாரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. இச்சம்பவத்தில், 24 வயதான யோகராசா தினேஸ் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை கண்டித்து, குறித்த இளைஞனின் சொந்த இடமான துன்னாலையில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டதுடன், பெரும் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், குறித்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், வன்முறை இல்லாமல் நடைபெற வேண்டும் என பருத்தித்துறை மாவட்ட நீதிபதி கந்தசாமி நளினி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்ந சந்தர்ப்பத்தில், துன்னாலை, நெல்லியடிப் பகுதிகளில் போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், எதுவித அசம்பாவிதங்களும் இல்லாமல், குறித்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றிருந்தன. குறித்த இறுதிக் கிரியைகளில், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இறுதிக் கிரியைகள் அமைதியாக நடைபெற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்புக்காக வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தனர். எவ்வாறெனினும், நெல்லியடியில், வழமைக்கு மாறாக, சனநடமாட்டம் குறைவாகவே இருந்திருந்தது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X