2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பொலிஸார் காணியை விடுவிக்காவிடின் நான் மீட்டு தருவேன்

Niroshini   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இளவாலை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை மே மாதம் 31ஆம் திகதிக்கு முன் மீளவும் காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்க தவறின், அரச சட்டத்தரணியும் நானும் வந்து பொருட்களை வெளியில் எடுத்து வைத்து உங்கள் காணிகளை மீட்டுத்தருவோம் என மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.

இளவாலை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணிகளை மீட்டுத்தருமாறு கோரி 12 காணி உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வடமாகாண பிரதிபொலிஸ்மா அதிபர், காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணையின்போது, மன்றில் கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர்,

 'விளான்' பகுதியில் பொலிஸ் நிலையத்துக்கு காணி கொள்வனவு செய்யப்பட்டு கட்டிட ஆரம்ப வேலைகள் தற்போது இடம்பெற்று வருவதாக மன்றில் தெரிவித்தார். மேலும் மே மாதம் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறும் மன்றில் கோரியிருந்தார்.

இதன்போது, கருத்து தெரிவித்த நீதவான்,

தனியாரின் காணிகளை இவ்வாறு நீண்டகாலமாக பொலிஸ் பாவனைக்கு வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.

மேலும்,  மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த காணிகளை ஒப்படைக்க தவறும் பட்சத்தில் அரச சட்டத்தரணியும் நானும் வந்து பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு காணிகளை பெற்றுத்தருவோம் என தெரிவித்தார்.

50 பரப்பு காணியில் 13 வீடுகளும் 8 விவசாய நிலங்களும் கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து பொலிஸார் பாவனைக்குட்படுத்தி வருகின்றனர். இக் காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் 01ஆம் திகதி காணி உரிமையாளர்கள், பொலிஸ் நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X