2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பிளாஸ்டிக் தடை 22 முதல் இறுக்கமாக கடைப்பிடிப்பு

George   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எமது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், அடுத்துவரும் தலைமுறைகளுக்கு மாசற்ற ஆரோக்கியமான பூமியைக் கையளிப்பதற்கும்,  பிளாஸ்டிக்  பைகளின் பயன்பாட்டை  தவிர்க்க, பூமி தினத்தில் அனைவரும் சபதம் ஏற்போம்” என்று, வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு சனிக்கிழமை அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பூமியில் குவிந்துவரும் கழிவுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பகுதியாக  உள்ளன. உக்கிப்போகாத இவை மனித ஆரோக்கியத்துக்கும் இயற்கைச் சூழலுக்கும் மிகப்பெரும் கேடுகளை விளைவித்து வருகின்றன.

 இதன் பாதிப்பை கருத்திற்கொண்டு இலங்கையில் 2007ஆம் ஆண்டு முதல் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ், 20 மைக்ரோன் அல்லது அதற்குக் குறைவான  பருமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்தல், விற்பனை செய்வதல் பயன்படுத்தல் என்பவை  தடை செய்யப்பட்டுள்ளன.

இதனை மீறுவோர் 10,000 ரூபாய் தண்டப்பணம் அல்லது 2 வருடங்களுக்குக் குறையாத  சிறைத் தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும்.

எனினும், இத்தடை  வடக்கு மாகாணத்தில் பூரணமாக நடைமுறைக்கு வரவில்லை. வட மாகாண சபையின் 10.01.2017ஆம் திகதி நடைபெற்ற 82ஆவது அமர்வின்போது, இத் தடையானது, ஏப்ரல் 22 ஆம் திகதியில் இருந்து வடக்கு மாகாணத்தில் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகள், மருத்துவமனைகள், அரச திணைக்களங்கள், பூங்கா, சுற்றுலா மையங்கள் என்பவற்றில் வகையான பிளாஸ்டிக் பைகள், ஒருநாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் குவளைகள், உணவுப் பெட்டிகள், தட்டுகள் போன்றவற்றையும் பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X