2021 ஜூன் 17, வியாழக்கிழமை

மாணவி கொலை : ‘நாங்கள் நிரபராதிகள்’

எம். றொசாந்த்   / 2017 ஜூன் 13 , மு.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில், ட்ரயல் அட் பார் முறையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், நேற்றுத் திங்கட்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசி மகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வழக்கின் பிரதிவாதிகளான, இந்திரகுமார், ஜெயகுமார், தவக்குமார் (சகோதரர்கள்), சசிதரன், சந்திரகாசன், துசாங்கன், குகநாதன், கோகுலன் மற்றும் சசிக்குமார் ஆகிய ஒன்பது பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். 

ட்ரயல் அட் பார் முறையிலான அமர்வு,காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது, 5 ஆவது பிரதிவாதியின் சார்பாக சட்டத்தரணி ஆறுமுகம் ரகுநாதன் முன்னிலையானார். 

4,7 மற்றும் 9 ஆம் சந்தேக நபர்கள் சார்பாக வழமையாக முன்னிலையாகும் சட்டத்தரணி வல்கம, நேற்று (12) ஆஜராகவில்லை.  

பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலை ஆகாத காரணத்தால் அது தொடர்பில் கலந்தலோசிக்க பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் ரட்ணம் கால அவகாசம் கோரிநின்றார். 

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழாம், வழக்கை 15 நிமிடங்கள் ஒத்திவைத்தது. 

15 நிமிடங்களின் பின்னர் அமர்வுகள் ஆரம்பமாகியது. இதன்போது, 4,6,7,8 மற்றும் 9 ஆகிய பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி எஸ்.கேதீஸ்வரன் மற்றும் 1,2,3 மற்றும் 5 ஆம் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி ரகுபதி முன்னிலையாவதாக தெரிவித்தனர். 

மேலும், 1 தொடக்கம் 9 வரையான பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி வி.ஜெயந்த, அரச செலவில் நியமிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தார் சார்பில் சட்டத்தரணி ரஞ்ஜித் முன்னிலையாகினார். 

கடத்தலுக்கு திட்டமிட்டமை, கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை உட்பட 41 குற்றச்சாட்டுகள் இதன்போது பிரதிவாதிகள் ஒன்பது பேருக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டன. 

இதன்போது, 1,2,3,5 மற்றும் 6 ஆம் பிரதிவாதிகள் மீது பாரதூரமாக கொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றங்களும், குறித்த வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு, தற்போது அரச சாட்சியாக மாறியுள்ள உதயசூரியன் சுரேஸ்கரன் உட்பட மற்றைய பிரதிவாதிகள் மீது குறித்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களும் சுமத்தப்பட்டன. 

இக்குற்றச்சாட்டுகளை பிரதிவாதிகள் மறுத்ததுடன் தாம் சுற்றவாளிகள் என மன்றுரைத்தனர். 

மேலும் பிரதி சொலிஸ்டர் குமார் ரட்ணம் இவ்வழக்கில் 17 ஆவது சான்றுப்பொருளாக குறித்த சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், 16 ஆவது சான்றுப்பொருளாக 5 ஆவது சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்ற அதேதினத்தில், வேலணை பிரதேச செயலகத்தில் கடமையாற்றியமைக்கான ஆவணங்களையும் இணைத்துக்கொள்ள அனுமதி கோரினார். இதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். 

இதேவேளை, இதுவரை இவ்வழக்கு இடம்பெற்று வந்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்களை ஆஜர்படுத்த தேவையில்லை எனவும் எதிர்வரும் 28 ஆம் திகதி, இந்த நீதிமன்றத்திலேயே முற்படுத்தலாம் எனவும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு இடம்பெற்று வந்த அனைத்து ஆவணங்களையும் இந்த நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சில சிங்கள மொழியில் உள்ளமையால் அவற்றை தமிழ் மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்து தருமாறு சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். 

இதனை கவனத்தில் எடுத்த நீதிபதிகள், எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஆவணங்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு நீதிமன்ற பதிவாளரிடம் வழங்கப்படவேண்டும். அவற்றை 20 ஆம் திகதிக்கு பின்னர் சட்டத்தரணிகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர். 

இதேவேளை குறித்த வழக்கில் 1 தொடக்கம் 37 வரையான இலக்கமிடப்பட்ட சாட்சி பொருட்களைஎதிர்வரும் 28 ஆம் திகதி முன்னிலையாகுமாறு நீதிபதிகள் கட்டளையிட்டனர். 

அத்துடன் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அரச சாட்சியாக மாறிய தற்போது யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உதயசூரியன் சுரேஸ்கரனையும் 28 ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு யாழ். சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதேவேளை எதிர்வரும் 28, 29, 30 மற்றும் ஜூலை மாதம் 3, 4, 5 ஆகிய திகதிகளில் குறித்த வழக்கு தொடர் விசாரணைகளுக்கான யாழ். மேல் நீதிமன்றில் காலை 9 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். 

மேலும், சந்தேகநபர்கள் அனைவரும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பில் தான் அவர்களுடன் உரையாடவேண்டியுள்ளதால் அவர்களை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுமாறு சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுநாதன் கோரிக்கை விடுத்தார். 

எனினும் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அரச சாட்சியாக மாறிய உதயசூரியன் சுரேஸ்கரன் தற்போது யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால், குறித்த சந்தேக நபர்களையும் யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுவது அவருக்கு அச்சுறுத்தால் ஆகும். எனவே எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைகளின் பின்னர் இது குறித்து தீர்மானிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

மாணவி, 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. 

இந் நிலையில், 10 ஆம் சந்தேக நபரான ஜெயவர்த்தன மற்றும் 12 ஆம் சந்தேகநபரான ரவீந்திரன் ஆகிய இருவருக்கும் எதிராக சாட்சியங்கள் எவையும் இல்லாத காரணத்தால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தால் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டனர். 

இதேவேளை, உதயசூரியன் சுரேஸ்கரன் குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அரச சாட்சியாக மாறி தற்போது யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

ஊர்காவற்றுறை நீதிமன்றல் இடம்பெற்று வந்த வழக்கு நிறைவுற்ற நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்ய மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

விம்மி விம்மி அழுதார் தாயார்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில், ட்ரயல் அட் பார் முறையில் விசாரணைக்கு நேற்று திங்கட்கிழமை எடுத்துக் -கொள்ளப்பட்டபோது, மாணவியின் தாயார், விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தார். 

இந்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதிகள், ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 

இதன்போது, 1,2,3,5 மற்றும் 6 ஆம் பிரதிவாதிகள், மீது பாரதூரமாக கொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றங்களும், குறித்த வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு, தற்போது அரச சாட்சியாக மாறியுள்ள உதயசூரியன் சுரேஸ்கரன் உட்பட மற்றைய சந்தேக நபர்கள் மீது குறித்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய 41 குற்றங்களும் சுமத்தப்பட்டன. 

இக்குற்றச்சாட்டுகளை பிரதிவாதிகள் மறுத்ததுடன் தாம் சுற்றவாளிகள் என மன்றுக்கு தெரிவித்தனர். 

சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் வாசித்து காட்டப்பட்டபோது, எனினும், மன்றிலிருந்த வித்தியாவின் தாயார் தொடர்ச்சியாக அழுதவண்ணம் இருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .