2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலைக்க​ழக மாணவர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசனை

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், எவ்வித அச்சமும் சந்தேகமுமின்றி, சுதந்திரமாக தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, அப்பல்கலைக்கழக மாணவர்களிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பெற்றோர்கள், நேற்று வியாழக்கிழமை (04) பிற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதியைச்  சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அண்மையில், யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக, அங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அங்கு கருத்துத் தெரிவித்த உபவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரத்தினம், “பல்கலைக்கழகத்துக்குள் அண்மையில் இடம்பெற்றது போன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள், மீண்டும் எந்தவகையிலும் ஏற்படாதிருக்கும் வகையிலான, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, “மாணவர்களின் பாதுகாப்புக்கான முழுமையான பொறுப்பு, அரசாங்கத்தையே சாரும்” எனத் தெரிவித்ததுடன், “எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அதுதொடர்பாக கூடிய கரிசனையுடன் செயற்படுமாறு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

பல்கலைக்கழகத்தினுள் மாணவர்களின் பாதுகாப்புக்காக, மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பதற்கும், இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

உயர்க்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X