2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வடக்கு மீன்பிடி அமைச்சர் 5 அம்சக் கோரிக்கை முன்வைப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 26 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, வட மாகாண மீன்பிடி விவகார அமைச்சர் கந்தையா சிவநேசன், கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். 

அக்கடிதத்தின் பிரதிகளை, வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும், திருகோணமலை, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு மாவட்டங்களின் கடற்றொழிலாளர் சங்க சமாஜம் ஆகியனவற்றுக்கும் அனுப்பிவைத்துள்ளார். 

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

“20.09.2017 அன்று, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களுடன், வடமாகாண மீன்பிடித்துறை சார்ந்த விடயங்களுக்கான அமைச்சர் என்ற ரீதியில் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கிணங்க, கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் முக்கியத்துவம் கருதி, தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன். 

“கீழ்க் குறிப்பிடப்படுகின்ற விடயங்கள், ஏற்கெனவே பல தடவைகள் பல சந்திப்புகளில் பல அமைப்புகளினூடாக தங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டபோதிலும், அவை குறித்து எதுவித முன்னேற்றமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்கின்ற பெரும் மனக்குறை, நான் பிரதிநிதித்துவம் செய்யும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீன்பிடிச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு உண்டு. 

எனவே, இவ்விடயங்களில் விசேட கவனம் செலுத்தி, அவற்றுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

1. வெளிமாவட்ட மீனவர்களின் அளவுக்கதிகமான வருகை

ஒவ்வோர் ஆண்டிலும் பங்குனி மாதம் முதல் புரட்டாதி மாதம் வரையிலான 09 மாதங்களுக்கு மட்டுமே தொழில் செய்யக்கூடிய முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மீனவர்கள், அக்காலத்தில் பெறக்கூடிய வருமானத்தைக் கொண்டே, ஏனைய 03 மாதங்களுக்கு வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டியவர்களாகவுள்ளனர். 

2012ஆம் ஆண்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், இராணுவத் தளபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய அனுமதியளிக்கப்பட்ட 33 வெளிமாவட்ட மீனவர்களுக்கு மேலதிகமாக இன்று 400 படகுகளைக் கொண்டு ஏராளமான வெளிமாவட்ட மீனவர்கள் குடியிருப்புகளை உருவாக்கி, தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பருவ காலத்துக்கு பார ஊர்திகளில் தமது படகுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வரும் இவர்கள், தமது செயற்பாடுகளுக்கு மத்திய மீன்பிடி அமைச்சும், சம்பந்தப்பட்ட மாவட்ட மீன்பிடி சமாஜங்களும் அனுமதி தருவதாகக் கூறுகின்றார்கள்.  

“ஒரு நாளைக்கு ஏறக்குறைய 5,000 கிலோகிராம் மீன்களைப் பெறக்கூடிய பிரதேசத்தில் சுமார் 4,000 கிலோகிராம் வரையிலான மீன்கள், வெளிமாவட்ட மீனவர்களால் எடுத்துச் செல்லப்படுகிறன. இது எந்தளவுக்கு உள்ளூர் மீனவர்களைப் பாதிக்கும் என்பதையும் அவர்களுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது எந்தளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன்.  

“பாரம்பரியமாக 200 வருடங்களாக கொக்கிளாய் பிரதேசத்தில் வாழ்ந்துவரும் மக்கள், புதிதாக வந்துள்ள வெளிமாவட்ட மீனவர்களால் தொழிலில் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்படுகின்றனர்.  

“எனவே, அனுமதிக்கப்பட்ட வெளிமாவட்ட மீனவர்களைத் தவிர ஏனையோர் தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்க தங்கள் அமைச்சு, திணைக்களங்கள் மற்றும் வெளிமாவட்ட சமாஜங்களை இணைத்து உறுதியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

2. சட்டவிரோத மீன்பிடி 

“வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மீனவர்கள் பெருமளவில், மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள சட்டவிரோத மீன்பிடி முறையையே பயன்படுத்துகின்றனர். வெடிபொருள்கள், தடை செய்யப்பட்ட சுருக்குவலை, உழவு இயந்திரத்தைப் பயன்படுத்துதல், குளோரின் இடுதல், செய்மதிக் கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற பல முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.  

“தற்போது இலகுவாக மீன்பிடிப்பதற்காக குளோரின் பயன்படுத்துகிறார்கள். பாவனைக்குதவாத படகுகளை மண்மூடைகள் கொண்டு கடலின் ஆழத்தில் அமரச் செய்து பின்பு செய்மதிக் கருவிகள் மூலம் அடையாளம் கண்டு அப்பகுதியில் வெடிமருந்தைப் பாவித்து, மீன்களை அள்ளுகிறார்கள். மேலும், காளான்பற்றை மூலம் மீன்பிடித்தல், கலர்மீன் பிடித்தல், அட்டை பிடித்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். இதற்காக அவர்கள் கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதால் பாறைகளில் மீன்கள் தங்குவதில்லை. இதனால் சிறு தொழிலாளர்களும் பாதிப்படைகிறார்கள்.  

“மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் இவ்விடயத்தில் கையறுநிலையில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்குப் பிரிவினரிடமிருந்து போதியளவு ஒத்துழைப்புக் கிடைக்காமையும் இதன் பிரதான காரணமாகும். எனவே தாங்கள், மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.  

3. வெளிமாவட்டங்களுக்குச் சென்று மீன்பிடிக்க அனுமதி 

“முல்லைத்தீவு வரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தமது மாவட்டங்களில் மீன்பிடித் தொழிலை செய்ய முடியாத காலங்களில் மீன்பிடித்துறை அமைச்சின் அனுமதியுடனும் வந்து தொழிலை மேற்கொள்ளுவது போல, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருமாறு, தங்களிடம் தாழ்மையுடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன். 

“இனம், மதம், மொழிகளைக் கடந்து ஒரே சமூகமாக இயங்கும் கடற்றொழிலாளர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்படுகின்ற வாழ்வாதார இழப்பை ஈடுகட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் ஏனைய சமாஜங்களுக்கும் உண்டல்லவா? நல்லிணக்கம் என்பதும் அதுதானே? எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட சமாஜங்களின் பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சமாஜங்களின் பிரதிநிதிகள் இது விடயமாகக் கலந்துரையாடித் தீர்மானங்களை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.  

4. இறங்குதுறைகளின் அவசியம் 

“முல்லைத்தீவு மாவட்டத்தின் நீண்ட கடல் எல்லையில் பெரும் தொழில் செய்வதற்கு ஏற்ப இறங்குதுறைகள் கிடையாது. இதன் காரணமாக தொழிலாளர்கள் 18’, 19’ படகுகளைக்கூட பயன்படுத்துவதில்லை. எனவே, முல்லைத்தீவில் சகல வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான இறங்குதுறை ஒன்றை நிர்மாணிக்கவும், தெற்கில் கொக்கிளாயிலும் வடக்கே சாலையிலும் மேலும் இரு இறங்குதுறைகள் அமைக்கவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

5. பாடுகளின் உரிமம் 

“முல்லைத்தீவு வடக்கு கடல் எல்லையில் பரம்பரை பரம்பரையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், தமது பாடுகளின் உரிமம் குறித்த தகவல்கள், பாடுகள் சம்பந்தமான இறுதியாக வெளியான வர்த்தமானியில் உள்வாங்கப்படாததால் நடைமுறை ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். ஏற்கனவே, இந்நிலைமை பற்றி தங்கள் அமைச்சின் அதிகாரிகளிடம் கலந்துரையாடியிருந்தபோதும் உறுதியளித்தபடி எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே, இது விடயத்திலும் தங்கள் தலையீட்டையும், தீர்வையும் எதிர்பார்க்கின்றேன்.  

“மேற்கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் பல்லாயிரக்கணக்கான முல்லைத்தீவு மாவட்ட கரையோர சமூக மக்களின் வாழ்வாதாரங்களுடன் பின்னிப் பிணைந்துள்ள அடிப்படைப் பிரச்சினைகளாகவுள்ளன. எனவே, இவை அனைத்துக்கும் மிக விரைவாகவும், சாதகமானதுமான நடவடிக்கைகளை தங்கள் மூலம் எதிர்பார்க்கின்றேன். 

“தாங்கள் நேரம் ஒதுக்கித் தரும் பட்சத்தில், இவ்விடயங்கள் குறித்து நேரில் சமுகமளித்து கலந்துரையாடலை மேற்கொள்ளவும் ஆயத்தமாகவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .