2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவி

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தின் சுற்றுலா அபிவிருத்திக்கு, அவுஸ்திரேலியா அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளதென, இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி தெரிவித்தார்.  

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலிக்கும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான உத்தியோகபூர்வச் சந்திப்பு, ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை நடைபெற்றது.  

இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தால், வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், வடக்கு மாகாணத்தின் நீர்ப்பிரச்சினை, அதனைத் தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள ‘வடமராட்சி களப்பு’ திட்டம் உள்ளிட்ட செயற்றிட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.  

அத்துடன் வடக்கு மாகாண சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக உதவிகளைச் செய்வதற்குத் தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்ததுடன், ஏற்கெனவே பயிற்சி வழங்கல் உள்ளிட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை வடமாகாணத்தில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.  

இதுதொடர்பில் ஆளுநருடன் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும், அவர்  தெரிவித்தார்.  

இதேவேளை இலங்கை அகதிகள், சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயல்வது குறித்துக் கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்த, அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.  

இதன்போது, சட்டவிரோத ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று தெரிவித்த ஆளுநர், அகதிகள் விடயத்தில், அவுஸ்திரேலிய அரசாங்கமானது கனடா போன்று மனிதாபிமான ரீதியில் உள்ளீர்ப்பது தொடர்பிலான கொள்கையொன்றை உருவாக்குவதன் ஊடாக, சர்வதேச ரீதியில் தனக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்தார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .