2025 ஜூலை 24, வியாழக்கிழமை

‘வட மாகாண அமைச்சர் சபையின் மாற்றம் உண்டாகலாம்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 05 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- எஸ்.நிதர்ஷன்

“வட மாகாண அமைச்சர் சபையில் மாற்றம் உண்டாகலாம். ஆனால், முழுமையாக அமைச்சர் சபை மாற்றியமைக்கப்படுமா அல்லது பகுதியளவில் மாற்றியமைக்கப்படுமா என்பது தொடர்பாக நான் இன்னும் தீர்மானிக்கவில்லை” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் நிறைவில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண அமைச்சர்கள் பதவி நீக்கம் மற்றும் இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக அவர்களுக்கு கட்டாய விடுமுறையை முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களாக இருக்கும் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலாநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை 6 மணி தொடக்கம் 9.45 மணி வரை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

சந்திப்பின் நிறைவில், சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போது, இந்தச் சந்திப்பின் பின்னர் வட மாகாண அமைச்சர் சபையில் மாற்றம் செய்யப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அமைச்சர் சபையில் மாற்றம் உண்டாகலாம். ஆனால், முழுமையாக அமைச்சர் சபை மாற்றம் செய்யப்படுமா அல்லது பகுதியளவில் மாற்றம் செய்யப்படுமா என்பது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. ஆனால், அமைச்சர் சபையில் மாற்றம் உண்டாகலாம்” எனக் கூறினார்.

மேற்கூறப்பட்ட சந்திப்பில், வட மாகாண அமைச்சர் சபையை மாற்றம் செய்ய அல்லது திருத்தியமைக்க முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு உள்ள சட்ட ரீதியான அதிகாரத்தை அவர் சுதந்திரமாக பயன்படுத்தலாம் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் எடுக்ப்பட்டிருப்பதாக சந்திப்பின் நிறைவில் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், கொழும்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நடைபெற்ற சந்திப்பில் கேட்டு கொண்டதற்கு அமைவாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இணைந்து சந்தித்தாகக் கூறியுள்ளார்.  

மேலும் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், “இந்தச் சந்திப்பின்போது 3 தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றது. முதலாவது தீர்மானம், முதலமைச்சர் தனக்குள்ள சட்டரீ தியான தற்துணிவு அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம் அல்லது திருத்தம் செய்ய அங்கத்துவ கட்சிகள் சம்மதம் தெரிவிக்கின்றன. இரண்டாவது தீர்மானம், பதவி நீக்கப்படும் அமைச்சர்கள் குற்றம் செய்தவர்களாக கருதப்படமாட்டார்கள். மூன்றாவது தீர்மானம், புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படும்போது அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்ற 3 தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், கூடுமான அளவுக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து தமிழ் மக்களின் நலனுக்காக தொடர்ந்து சந்திப்புக்களை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய அரசமைப்பு தொடர்பாகவும் விரைவில் சந்தித்துப் பேசுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக” கூறியுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .