2025 மே 22, வியாழக்கிழமை

விலையுயர்வு, வரிச்சுமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 மே 29 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், டி.விஜித்தா

பொருட்களின் விலையேற்றத்தையும் வரி அதிகரிப்பையும் கண்டித்து, யாழ்ப்பாணத்தில் இன்று (29), கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

புதிய மாக்ஸிச லெனிசக் கட்சியின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“விலை உயர்வும் வரிச் சுமையும், உழைக்கும் மக்களின் தலைகளிலா?” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மக்களுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களின் விலைகள், நாளாந்தம் அதிகரிக்கப்பட்டு வருகின்றமை உச்சமாகியுள்ளதென்றும் அசிரி, சீனி, தேங்காய், மல்லி, மிளகாய், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள், தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காடினர்.

தற்போதைய மைத்திரி - ரணில் அரசாங்கம், பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குகளை மறந்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையகத் தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் என்பன, இப்புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி, தமக்குரிய பதவிகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டு, மக்கள் தொடர்பில் கவனிப்பாரின்றியுள்ளன என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குறிப்பிட்டனர்.

எரிவாயு, எரிபொருட்கள், பஸ் கட்டணங்கள், முச்சக்கர​வண்டிக் கட்டணங்கள் என்பனவும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ​நாட்டின் ஏகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள், பெரும் வாழ்க்கைச் செலவுச் சுமையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

உலகமயமாதலினூடான தாராளமயமும் தனியார்மயமும், பெரும் ஊழல்களையும் மோசடிகளையும் சர்வசாதாரணமாக்கி விட்டுள்ளனவென்றும் குறிப்பிட்ட அவர்கள், அதன் தொடர்ச்சியே, முன்னைய ஆட்சிகளிலும் இன்றைய ஆட்சியிலும் இடம்பெறுவதாகவும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு, நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள், ஆளும் வர்கங்களன் அரசியல் பிரதிநிதிகளாகவும் அவர்களது உயர்மட்ட நிர்வாகிகளாகவுமே உள்ளனரென்றுக் குற்றஞ்சாட்டினர்.

இதனால், இன்றைய விலை உயர்வுகளும் கட்டண அதிகரிப்புகளும், கடன் சுமைகளும், ஊழல் மோசடிகளும், தவறான பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தல்களின் மோசமான எதிர்விளைவுகளெனச் சுட்டிக்காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், எனவே, உழைக்கும் மக்கள், தமது ஒடுக்கப்படும் வர்க்க நிலையை, பொருளாதார, அரசியல், சமூக நிலைகளின் அடிப்படையில் கண்டுணர்ந்து, அனைவரும் ஓரணியில் அணிதிரள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்ததோடு, தமது கோரிக்கைகள் வெற்றிகொள்ளப்படும் வரை, வெகுஜனப் போராட்ட மார்க்கத்தில், முன்​னேறிச் செல்லவேண்டுமெனவும் வலியுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X