2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண சபைக்கு அழைப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் நாளை செவ்வாய்க்கிழமை (22) காலை 8 மணிக்கு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு முன்னால் ஒன்று கூடுமாறு, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சமூகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

'கடந்த திங்கட்கிழமை (07) யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, வடமாகாண பட்டதாரிகளை வேலைவாய்ப்புகளுக்கு உள்ளீர்ப்புச் செய்யுமாறு கோரிய மகஜர், வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர், யாழ். மாவட்ட செயலர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன. இரண்டு வார அவகாசம் வழங்கப்பட்டும் இதுவரை அவர்களிடமிருந்து சாதகமான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

குறித்த கவனயீர்ப்பில் வடமாகாண அமைச்சுக்களின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய ஆளணி வெற்றிடங்களுக்கான அனுமதியினைப் பெறுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் உரியவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் பட்டதாரிகளினால் கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இந்நிலையில், நாளைய தினம் இடம்பெறும் ஒன்றுகூடலையடுத்து, வடமாகாணப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய வருகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான குழுவினரிடம் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவரினதும் கையெழுத்துக்களின் பதிவுகளுடன் கூடிய மகஜர் ஒன்றும் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடமாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் தவறாது கலந்து கொள்ளவேண்டும்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .