2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விவசாயக் கிணறுகள் புனரமைப்பு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலுள்ள சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள், வடமாகாண விவசாய அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி, வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நேற்றுத் திங்கட்கிழமை (12) யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவும், போதிய பராமரிப்பு இல்லாமலும் யாழ். குடாநாட்டிலுள்ள ஏராளமான விவசாயக் கிணறுகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனால் மழைநீருடன் இரசாயனங்கள் விவசாயக் கிணறுகளினுள் சென்று நிலத்தடிநீரை மாசடையச் செய்து வருகின்றன. இதனைத் தடுக்கும் நோக்கிலேயே வடக்கு விவசாய அமைச்சு விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணியைக் கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளது.

விவசாயக் கிணறுகள் பற்றிய விவரங்கள் விவசாயப் போதனாசிரியர்கள் மூலம் திரட்டப்பட்டுள்ளன. இவற்றில், முதற்கட்டமாக நிலத்தடி நீருடன் விவசாய இரசாயனங்கள் கலப்பதற்கான கூடுதல் வாய்ப்பைக் கொண்ட 139 கிணறுகள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு, அக்கிணறுகளின் பங்குதாரர்கள் இந்நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டு, புனரமைப்பு தொடர்பன விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், 100 கிணறுகள் இரண்டாம் கட்டத்தில் உடனடியாக உள்ளீர்க்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயக் கிணறுகளைப் புனரமைப்பதற்கென இந்த ஆண்டுக்கு 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதி, பளையில் இயங்கி வரும் யூல் பவர் மற்றும் பீற்றா பவர் காற்று மின் ஆலைகள் வணிக நிறுவனங்களுக்கான சமூகக்கடப்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் வடக்கு விவசாய அமைச்சுக்கு வழங்கி வரும் நிதி என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இத்தொடக்க நிகழ்ச்சியில் வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜா, மாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், அ.பரஞ்சோதி, இ.ஆர்னோல்ட், யூல் பவர், பீற்றா பவர் காற்று மின்னாலைகளின் பணிப்பாளர் மொயிஸ் நஜ்முடின், விவசாய அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X