2025 ஜூலை 16, புதன்கிழமை

'அரசாங்கத்தின் நிலைப்பாடு தமிழர்களின் மனநிலைக்கு மாறானது'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவட்ட அபிவிருத்திக்குழுவுக்குத் தலைமை தாங்குவோர் தொடர்பில் இன்றைய அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாடு தமிழ் மக்களின் மனநிலைக்கு மாறானது  என வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

ஏழாலை கண்ணகியம்மன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற கலைவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மிகப்பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் தமிழ் மக்களுடைய அபிவிருத்தி,நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தி விரைவுபடுத்துகின்ற பொறுப்புமிக்க சபை மாவட்ட அபிவிருத்திக்குழு ஆகும். இதற்குத்தலைமை தாங்குவதென்பது மிகவும் முக்கியம் வாய்ந்த, மக்களின் வாழ்வில் முடிவெடுக்கும் தகுதிவாய்ந்த பொறுப்புள்ள பதவியாகும்.

நல்லாட்சி என்ற போர்வைக்குள் மறைந்திருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய அரசாங்கம் இவ் அபிவிருத்திக்குழுவின் தலைமை குறித்து  நடந்துகொள்கின்ற முறை பல்வேறு விடயங்களிலும் குறிப்பாக வாக்குறுதியளித்தபடி அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, வலி.வடக்கு உட்பட்ட உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்ச்சியாக அப்படியே இருக்கின்றமை முதலியன இவற்றுள் சிலவாகும். இவையாவும் தமிழ்மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்திருக்கின்றது.

கடந்த கால அரசாங்கங்கள் நடந்துகொண்ட விதத்திலும் பார்க்க, நல்லாட்சி போர்வையிலான அரசாங்கம் தமிழ்மக்களின் விருப்பங்களுக்கு எதிராக நடந்துகொள்கிறதோ எனும் சந்தேகம் தோன்றும் வகையில் இறுதியாக நடைபெற்றுக்கொண்டிருப்பது தான் யாழ்.கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைமை விவகாரமாகும்.

தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட மற்றும் ஓரிரு கழிவுவாக்குகளால் நாடாளுமன்ற வாசலை மிதித்த பேரினவாத கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய தலைமைப் பதவிகளை வழங்குவதன் மூலம் அக்கட்சிகளை எம் தாயகத்தில் காலுன்றவைக்கும் உத்தியோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் எடுக்கப்போகும் இறுதிமுடிவு தான் இந்த மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டங்கள் எதிர்காலத்தில் எப்படி இடம்பெறும் என்பதை தீர்மானிக்கும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X