2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'அரசியல் அமைப்பில் மத்திய அரசின் உள்ளீடுகள் குறையவானதாக இருக்கவேண்டும்'

George   / 2016 ஜூன் 11 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'நாட்டில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் தேவைகளுக்கு இடமளிப்பதாகவும் மத்திய அரசின் உள்ளீடுகள் குறைவானதாகவும் இருக்கவேண்டும். இதனை அடிப்படையாக கொண்டே அரசியல் யாப்பு அமையவேண்டும்' என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

வடமாகாண முதலமைச்சரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டீயூரிஸ், வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடல் தொடர்பாக ஊடகங்களுக்கு முதலமைச்சர் தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

'மத்திய அரசாங்கமானது கொண்டு வருகின்ற சட்டங்கள் எடுத்து கொள்ளப்பட்ட தீர்மானங்கள் நன்மை பயப்பதாகவுள்ளதா? அதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? என அவர் என்னிடம் கேட்டிருந்தார். இதற்கு நான் ஏற்றுக்கொள்கிறேன். அதிலேதும் பிரச்சனை இல்லையென கூறியிருந்தேன்.

அவ்வாறானால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்று என்னிடம் அவர் மீண்டும் கேட்டார் எங்களுக்கு பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டாவது எங்களுடன் கலந்தாலோசிக்காமல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடர்பிலும் செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படுவதிலுமே எங்களுக்கு பிரச்சினை, முரண்பாடுள்ளது என தெரிவித்தேன்.

அரசியலமைப்பு மாற்றம் சம்பந்தமாக என்ன எதிர்பார்கின்றீர்கள் என்ற கேள்வியை உயர்ஸ்தானிகர் என்னிடம் முன்வைத்திருந்தார், முன்மொழிவுகள் தொடர்பான இறுதி வரைபை சபாநாயகரிடம் கையளித்துள்ளோம். அத்துடன், எங்களுக்கு பொதுவான சுயாட்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களையும் மற்றைய மாகாண மக்களையும் எடுத்து பார்த்தால் எங்களிடையே இருக்கும் வேற்றுமைகள் வித்தியாசங்கள் வெளிப்படும். 

குறிப்பாக மொழி மதம் இடம் கலாசாரம் பண்பாடு ரீதியாக பலவிதமாக இருக்கின்றன. இந்நிலையில், எங்களுடைய பின்புலத்தின் அடிப்படையில் அதற்கு ஏற்றவாறு நாங்கள் நடவடிக்கை எடுக்கவும், எங்களது பொருளாதார விருத்தியை கொண்டு நடாத்தவும் எங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். 

அதிலே மத்திய அரசாங்கத்தின் உள்ளீடு குறைவாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலே யாப்பு மாற்றங்கள் அமைய வேண்டும். அவ்வாறில்லா விட்டால் இந்த பிரச்சனை வருங்காலத்திலும் இடம்பெறும். எனவே, நிதானமாக பலகாலம் நீடித்திருக்க கூடிய தீர்வை பெற்றுத்தர வலியுறுத்த வேண்டும் என உயர் ஸ்தானிகரிடம் குறிப்பிட்டுள்ளேன்' என முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X