2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

'உள்ளக விசாரணை தேவையில்லை'

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மனித உரிமை மீறல்களை புரிந்தவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ககையில், 'தற்போது வடக்கு, கிழக்கிலே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற விடயமான உள்ளக விசாரணையா? அல்லது சர்வதேச விசாரணையா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பல விமர்சனங்கள் முன்வைத்து தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் யாரும் உள்ளக விசாரணைகளை ஆதரிக்கவில்லை.

சர்வதேச விசாரணைகள் ஊடாக, எங்களுடைய மக்களின் அழிக்கப்பட்ட வாழ்க்கை, மனித உரிமை மீறல்கள் மற்றும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஆகியவற்றில் சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவ்வித தளர்வையும் ஏற்படுத்தாத நிலையில் அதனை வலுவான ஒரு விடயமாக இன்று பல சர்வதேச தலைவர்களிடம் நாங்கள் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.

சர்வதேச விசாரணைகளினூடாக நாம் இரு விடயங்களை கையாள முடியும். விசாரணை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு ஆகிய இரண்டையும் கையாளக்கூடிய வசதி வாய்ப்புக்களை சர்வதேச விசாரனைகளினூடாகவே ஏற்படுத்த முடியும் என்பதே எங்களுடைய நம்பிக்கையாக இருக்கின்றது.

அந்த வகையிலே நாங்கள் ஒரு போதும் உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை. உள்ளக விசாரணைகள் ஊடாக பல ஆணைக்குழுக்களை கூட்டி ஒரு பிரச்சினை உச்ச கட்டத்தில் இருக்கின்ற போது ஆணைக்குழுக்களை அமைப்பதன் ஊடாக அதனை தளர்த்துவதற்கான தன்மையைத்தான் கடந்த கால வரலாறுகள் கூறுகின்றன.

உள்ளக விசாரணை என்பது சர்வதேச விசாரணையை தளர்த்துவதுக்கும் அதனை வலு இழக்கச் செய்து அதனை கிடப்பிலே போடுவதற்கான வாய்ப்பாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இந்த உள்ளக விசாரணைகளை எதிர்க்கின்றோம்.

எனவே, சர்வதேச விசாரணை என்பது நடத்தப்பட்டு, ஐ.நா.வில் எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதன் தீர்ப்பை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லுகின்ற வாய்ப்பை தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு ஏற்படுத்தும். அதனூடாக தண்டிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு நிலைப்பாடாக இருக்கின்றது.

எதிர்வரும் 30ஆம் திகதி ஜெனீவாவில் சர்வதேச விசாரணைகள் இடம் பெறவுள்ள காராணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்வதற்கு இருக்கின்றோம்.

அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி எதிர்வரும் 30ஆம் திகதி ஜெனீவா செல்லும் வாய்ப்பை உருவாக்குவோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .