2025 ஜூலை 19, சனிக்கிழமை

'ஒருவரை விடுவித்துவிட்டு எங்களை ஏமாற்றாதீர்கள்'

Niroshini   / 2016 ஜனவரி 11 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகள் விடயத்தில் ஒருவரை மாத்திரம் விடுவித்துவிட்டு மற்றவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

'ஓர் அரசாங்கம் உருவாகி 100 நாட்களுக்குள் செய்ய வேண்டியதை செய்ய முடியும். ஏனெனில், அந்த அரசாங்கம் உருவாகி 100 நாட்களுக்குள் செய்யும் விடயங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்காது. ஆனால் நாங்கள் 365 நாட்கள் காத்திருந்தும் எவ்வித பயனும் இல்லை'

20 ஆயிரம் பேர் காணாமற்போயுள்ளனர். இறுதி யுத்தத்தில் 8,000 போராளிகள் சரணடைந்து காணாமற்போயுள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். 200 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். காணிப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். மக்களின் காணிகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இராணுவ விஸ்தரிப்பை ஏன் செய்கின்றனர்? இன்னொரு நாட்டுக்கு கூலிப்படையாக இலங்கை இராணுவத்தினர் செல்லவிருக்கின்றனரா? அரசாங்கம் இதனைக் கைவிடவேண்டும்.

அனைத்தையும், உடனேயே செய்யுங்கள் என்று கூறவில்லை. படிப்படியாக ஒவ்வொன்றையும் செய்யுங்கள். அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யுங்கள். இல்லாவிடின் அரசாங்கம் கூறியது போல, 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுங்கள். அதனைவிடுத்து அரசியல் கைதிகளே இல்லையெனக் கூறாதீர்கள்.

இனப்பிரச்சினைக்கு இலங்கைக்குள் ஒரு தீர்வை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது. மூன்றாந்தரப்பு மத்தியஸ்தின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X