2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'கச்சதீவை கையளித்தமை இழைத்த அநீதியாகும்'

Gavitha   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஸ் மதுசங்க

'கச்சதீவை இலங்கைக்கு கையளித்தமையானது, இந்திய மீனவர்களுக்கு இழைத்த பாரிய அநீதியாகும். இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து, இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடித் தீர்வு காண்பதை விட, மீனவர்களே சுமுகமாக தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என இந்திய மீனவர் சங்கங்களின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

கச்சதீவு புதின அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலிருந்து வருகை தந்திருந்த இந்திய மீனவர் சங்கங்களின் தலைவர்களே மேற்கண்டவாறு கூறினர்.

இது தொடர்பில், இந்தியாவின் இராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவர் எஸ்.யேசுராசா கூறுகையில், 'இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள், இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படுவதென்பது பாரிய அநீதியாகும். இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதற்குக் காரணம், இந்திய கடற்பரப்பு மிகவும் சிறிய வரையறுக்கப்பட்டளவில் காணப்படுவதே ஆகும். தவிர, இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் நோக்கம் இந்திய மீனவர்களுக்கு இல்லை' என்றார்.

'கச்சதீவை, இலங்கையிடம் இந்தியா கையளித்தமையினால், இந்தியக் கடற்பரப்பின் அளவு வரையறுக்கப்பட்டு விட்டது.

ஆரம்ப காலங்களில், வட மாகாணத்துக்கு உட்பட்ட தலைமன்னார், பேசாலை, யாழ்ப்பாணம் ஆகிய கடற்பரப்புக்களுக்குள் பிரவேசித்து இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட போதிலும், எவரும் அக்காலத்தில் கைது செய்யப்படவில்லை. பழைய முறையில், தற்போதைய மீனவர்கள் ஈடுபட்டிருந்த போதிலும் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இராமேஸ்வரம் தென்பகுதி மீனவர் சங்கத்தின் தலைவர் எஸ்.செமட்ரி கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் தென்பகுதி மீனவர்கள், இந்தியாவின் ஆந்திரா, ஒரிசா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களது கடற்பரப்புகளுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபடுகின்ற போதிலும், அவர்களை அம்மாநில பாதுகாப்பு தரப்பினர் கைது செய்வதில்லை. அதேபோன்று, இந்திய மீனவர்கள், பாகிஸ்தான் கடற்பரப்புகளுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபடுகின்ற போது கைது செய்யப்படுவதில்லை. காரணம், இந்தியாவும் அந்நாடுகளுக்கு அவ்வாறான பதிலையே அளிப்பதால், அங்கு பிரச்சினை ஏற்படுவதில்லை' என்றார்.

'இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கும் முறைமை மாறுபட்டதாக இருக்கின்றமையினால், இரு நாட்டு மீனவர்களைப் போலவே இரு நாட்டு அதிகாரிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்' என அவர் சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X