2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் பொலிஸ் நிலையத்தில்

Niroshini   / 2016 ஜூன் 02 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளான வசாவிளான், பலாலி பகுதிகளில் உள்ள தோட்டக்காணிகளில் சட்ட விரோதமான முறையில் கல் அகழ்வுக்கு பயன்படுத்திய 15 வாகனங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

புதன்கிழமை (01) மாலை பலாலி வடக்கு மற்றும் வசாவிளான் பகுதிகளில் உள்ள காணிகளில் சட்டவிரோதமான முறையில் கனரக வாகனங்களின் உதவியுடன் ஒரு சிலர் கல் உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அப் பகுதிக்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 5 டிப்பர் வாகனங்கள், 2 உழவு இயந்திரங்கள் மற்றும் 6 பெக்கோ வாகனங்களை பறிமுதல் செய்து அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

6 பெக்கோ வாகனங்கள் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் குறித்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் கல் அகழ்வு தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் கண்டுகொள்வதில்லை என பொதுமக்களினால் சுட்டிக்காட்டப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இவ் விடயம் தொடர்பில், மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினர் சிவில் உடையில் வந்து குறித்த பகுதிகளில் இடம்பெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை பார்வையிட்டு சென்றிருந்தனர். இதன் பின்னரே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப் பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டு இத்திடீர் முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்துவரும் உரிமையாளர்களின் காணிகளில் இவ்வாறு சட்டவிரோத கல் அகழும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகன சாரதிகளின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X