2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'கல்வீச்சு காட்டுமிராண்டித்தனமானது'

Princiya Dixci   / 2016 ஜூன் 30 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

யாழ்ப்பாணத்தில் பயணிகள் போக்குவரத்து வழித்தடங்களான காரைநகர் ஊடாக வவுனியாவுக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது உரும்பிராய் சந்நிதியிலும், மற்றய பேரூந்து சண்டிலிப்பாய்ப் பகுதியிலும் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை (28) மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறித்த சம்பவத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை எமது மாகாணத்தில் உள்ள ஒருசிலரே செய்கின்றார்கள் என்றால் எமது இனம் எதைநோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை எனவும், இது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு செயலாகவே இருக்கிறது எனத் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இவ்வாறான சம்பவங்கள் எமது மாகாணத்தில் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும், பதுங்கியிருந்து கல்வீச்சுக்களை செய்துவிட்டு தலைமறைவாகுவது ஒரு கோழையின் செயற்பாடு. முதுகெலும்புள்ளவர்களாக இருந்தாலோ அல்லது தங்களது பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்திலோ நேருக்கு நேர் நின்று நியாயமான முறையிலே அதனை அடைய முற்படவேண்டும்.

'இவ்வாறான சம்பவங்களில் காயப்படுத்தப்படுகின்றவர்கள் உங்களது தந்தை, தாய், மனைவி, அல்லது பிள்ளைகளெனில் அதனை உங்களால்  ஏற்றுக்கொள்ள முடியுமா?

'திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற கூற்றுக்கு அமைவாக இதனோடு தொடர்புபடுகின்றவர்கள் சற்று தூர நோக்கோடு சிந்தித்துச் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

'அத்தோடு, தற்போது இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையினருக்கிடையில் ஒரு சுமூகமான உறவு ஏற்படும் இத்தறுவாயில் இதனைக் குழப்பவேண்டும்.

'ஒரு சிலர் திட்டமிட்டு செயற்படுவதாகவே உணர முடிகின்றது. இது தொடர்பில் பொலிஸார் அதிக கவனம் செலுத்தவேண்டும். குறித்த சம்பவம் தொடர்பில் புலன்விசாரணைகளை பல கோணங்களிலும் நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X