2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

​'போர்க்குற்ற விசாரணையை நடத்த அரசாங்கம் முன்வராது'

George   / 2017 பெப்ரவரி 06 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்சன்

'“விசாரணையை நடாத்த அரசாங்கத்துக்கு எந்தவிதமான ஊக்கமோ, உற்சாகமோ, தேவையோ இருப்பதாகத் தெரியவில்லை” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் வெளியிட்ட கருத்து தொடர்பில் தென்னிலங்கையில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் கேட்ட போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “விமர்சனங்கள் வந்திருப்பது எனக்குத் தெரியும். இது தொடர்பான சட்டங்களும் எனக்குத் தெரியாத ஒன்றல்ல. ஆனால், இதிலே ஒரு முக்கியமான காரணமும் இருக்கின்றது. போர்க்குற்ற விசாரணையை நடாத்துவதற்கு அரசாங்கத்துக்கு எந்தவிதமான ஊக்கமோ, உற்சாகமோ, தேவையோ இருப்பதாகத் தெரியவில்லை.

அதனாலேயே இவ்வாறான கருத்தை நான் தெரிவித்த உடனேயே, அவ்வாறு செய்ய முடியாதென்று அவர்கள் பதற்றம் அடைவதிலிருந்து தெரிகின்றது. இந்தப் போர்க்குற்ற விசாரணையை நடத்தக் கூடாது என்ற எண்ணத்தில் தான் அவர்கள் எல்லோரும் இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.

போர்க்குற்ற விசாரணையை நாங்கள் நடத்தப் போவதாக இருந்தால், அவர்களுக்கு மனவருத்தமோ,  மனச்சஞ்சலமோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே,  அரசாங்கம் மற்றும் தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் போர்க்குற்ற விசாரணையை நடத்தப்போவதில்லை  என்பதை வெளிவுலகுக்கும் மக்களுக்கும் எடுத்துக் காட்டத்தான்  நான்  இதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு சட்டத்தில் இடமிருக்கின்றதா எனக் கேட்டேனே தவிர, சட்டத்தில் இடம் இருப்பதாக நான் கூறவில்லை.

சிலவிடயங்களில் எங்களுக்கு இருக்கும் உரித்துக்கள் எங்களுக்கு நன்றாகத் தெரியும். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், எங்களுக்குத் தரப்பட வேண்டிய உரித்துக்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதுடன், அவை தரப்படவில்லை. அல்லது தரப்பட்டவற்றை ஆளுநர் மூலமாக கட்டுப்படுத்தும் அதிகாரமும் அவர்களுக்கு இருக்கின்றது.

ஆகவே, இதைப் பற்றி நான் குறிப்பிட்டது, எங்களுடைய பெரும்பான்மையின அரசியல்வாதிகள் போர்க்குற்ற விசாரணை சம்மந்தமாக எவ்வளவு மனக்கிலேசம் அடைந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான். இவ்வாறானதொரு மனநிலையில் இருக்கின்ற கூட்டத்தினர் அல்லது அரசியல் கட்சியினர், எவ்வாறு எங்களுடைய மக்களுடைய போர்க்குற்றம் சம்மந்தமான  விசாரணைகளை  நடத்த முன்வருவருவார்கள் என்பது இதிலிருந்து புரிகின்றது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X