2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'மரணதண்டனை விதிக்கப்பட்டதாக கூறினார்கள்'

Niroshini   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'1990ஆம், 2012ஆம் ஆண்டுகளில் காணாமற்போன இரு மகன்களையும் கண்டுபிடித்து தருங்கள்' என கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமர்வில் தாயார் ஒருவர் சாட்சியமளித்தார்.

'இந்திய இராணுவத்தினர் இலங்கையில் இருந்த காலப்பகுதியில், இலங்கை பொலிஸ் தொண்டர் படை உருவாக்கப்பட்டது. இப்படையில் எனது மகனான மானிப்பாயைச் சேர்ந்த டி.சுகுணகுமார் (காணாமற்போகும் போது 21 வயது) இணைந்தார். யாழ். கோட்டைப்பகுதியிலேயே அவர் கடமையாற்றினார். இந்நிலையில், 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரை காணவில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர்கள் எழுத்து மூலம் எமக்கு தெரிவிக்கவில்லை. எனவே, நாம் அதனை நம்பவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்.

இதேவேளை, மற்றைய மகனான டி.சேரன்குமார் வவுனியாவில் வெல்டிங் கராஜ் நடத்தி வந்தார். அத்துடன், சீட்டு பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். சீட்டு தொழிலில் அவருக்கு நட்டம் ஏற்பட்டதால் அது தொடர்பாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி வெல்டிங் கராஜ்ஜில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு தெலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதனையடுத்து வெளியில் சென்றவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை.

இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். முறைப்பாட்டையடுத்து, மகனுடைய மோட்டார் சைக்கிளை பயன்படுத்திய ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது அது விலைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டதாக தெரியவந்தது என பொலிஸார் எம்மிடம் தெரிவித்தனர். மேலதிக விவரங்கள் எவையும் எமக்கு தெரிவிக்கப்படவில்லை.

தற்போது நாம் சென்று கேட்டபோது எனது மகன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டதாக தெரிவித்தனர். எனினும் நாம் அதை நம்பவில்லை. அவர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றால் நிச்சயமாக எம்முடன் தொடர்பை ஏற்படுத்தியிருப்பார். அவ்வாறு ஏதும் இல்லை' என அவர் சாட்சியமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X