2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'மஹிந்த அரசாங்கம் யுத்தத்தால் பறித்ததை மைத்திரி அரசாங்கம் சட்டத்தால் பறிக்கிறது'

Kogilavani   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழ் மக்களின் அரசியல் அதிகாரங்களைப் பறிப்பதில் மகிந்த ராஜபக்ஷ  தலைமையில் இருந்த கடந்த அரசாங்கத்துக்கும் மைத்திரிபால சிறிசேன  தலைமையில் இப்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்துக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடந்த அரசாங்கம் யுத்தத்தால் பறித்ததை, நடப்பு அரசாங்கம் சட்டத்தால் பறிக்க முயல்கிறது' என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இரணைமடு பாரிய நீர்ப்பாசனத்திட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திக்கு அருகில்  12மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'இந்த அரசாங்கத்தின் பெயரில் நல்லாட்சி என்ற சொல் ஒட்டிக் கொண்டிருப்பதால், பெரும்பாலானவர்கள் இந்த அரசாங்கம் நல்லதையே செய்யும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்;கள.; உண்மைநிலை அவ்வாறு இல்லை. கடந்த அரசாங்கம் துப்பாக்கி வேட்டுகள் முழங்;க முழங்க எல்லாவற்றையும் செய்தது. அதனால், அந்த அரசாங்கம் எங்களுக்குப் பாதகமாகச் செயற்படுகிறது என்று நாங்கள் யாருக்கம் விளக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

ஆனால், இந்த அரசாங்கம் சத்தமில்லாமல், மிகவும் நாசூக்காகச் சட்டங்களின் மூலம் எங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் பறிக்க எத்தனிக்கிறது.

நாங்கள் நிலங்களைப் பறிக்க வேண்டாம் என்று போராடுகின்றோம். ஆனால், அரசாங்கம் இப்போது இரணைமடுக் குளத்துக்கு அருகில்; 300 ஏக்கர்; காணியைத் தாவரவியல் பூங்கா அமைப்பதற்குத் தருமாறு கோருகிறது. இது ஒரு வகையில் மறைமுகமாக முன்னெடுக்கப்படும் நிலப்பறிப்பு. தாவரவியல் பூங்கா வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை.

நிலங்களை அபகரிக்காமல் பூங்கா அமைத்து நிர்வகிக்கும் பொறுப்பை மாகாண சபையிடம் தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். ஆனால், தமிழ்மக்களுக்கு மாகாண சபைகளினூடாக வழங்கப்பட்ட அற்பசொற்ப அதிகாரங்களைக்கூட விட்டுவைக்க நல்லாட்சி அரசாங்கம் தயாராக இல்லை.

பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து உள்ளூராட்சி சபைகளுக்கு இருந்த கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவது உட்பட பல அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபை தன்வசம் எடுத்துக் கொண்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தின் மூலம், தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, இன்னொரு புறம் அவசரம் அவசரமாக மாகாணங்களின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள மிகக் குறைந்த அதிகாரங்களையும் இரகசியமான முறையில் பறித்து வருகிறது.

இது தொடர்;பாக நாம் விழிப்பாக இல்லாவிட்டால், அரசியல் ரீதியாகத் தமிழ்மக்கள் மிகப்பெரும் தோல்வியைச் சந்திக்க வேண்டி ஏற்படும்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X