2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'மஹிந்த வன்வலுவால் செய்ததை மைத்திரி மென்வலுவால் சாதிக்கிறார்'

Kogilavani   / 2017 மார்ச் 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'இராணுவத்திடம் இருக்கும் தங்களுடைய நிலங்களை, தங்களிடம் மீளவும் தாருங்கள் என்று எமது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம், அரசாங்கம் வனவளப் பாதுகாப்பு என்ற பெயரால் நிலப்பறிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ முகாம்களை விரிவுபடுத்துவதற்காக எமது பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டன. இப்போது பச்சை முகமூடி அணிந்துகொண்டு காடுகளை விரிவுபடுத்துவதற்காக என்று சொல்லி, எமது நிலங்கள் சுவீகரிக்கப்படுகின்றன. மஹிந்த அரசு வன்வலுவால் செய்ததை, மைத்திரி அரசு மென்வலுவால் சாதிக்கிறது' என, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டினார்.

மன்னார் - பெரியமடுவில், திங்கட்கிழமை (20) இடம்பெற்ற நெல் அறுவடை விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'இராணுவ முகாம்களுக்கென்று நிலங்களைக் கையகப்படுத்தும்போது, இங்கு எழும் போராட்டங்களால் அரசுக்குச் சர்வதேச அரங்கில் நெருக்கடி ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக, அரசு இப்போது புது உத்தியைக் கையாள ஆரம்பித்திருக்கிறது. சர்வதேச அரங்கில் தனக்கு அவப்பெயர் ஏற்படாத விதத்தில், எமது நிலங்களை வனவளப் பாதுகாப்பு என்ற பெயராலும் வனவள ஜீவாராசிகள் என்ற பெயராலும், சட்டபூர்வமாகக் கையகப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வால், காணிகள் பராமரிப்பில்லாமல் போக, அங்கு மரங்கள் வளர்ந்துள்ளன. அதைக் காரணம் காட்டியே, வனவளத் திணைக்களம் தனது காடென்று சொந்தம் கொண்டாடுகிறது. வடக்கின் 5 மாவட்டங்களிலும், தமிழர்கள் முஸ்லிம்கள் என்ற வேறுபாடு இல்லாமல், தமிழ் பேசும் மக்கள் எல்லோருடைய நிலங்களும், இவ்வாறு பறிக்கப்பட்டிருக்கின்றன.

மாகாணக் காணி ஆணையாளரிடம் இது தொடர்பான தகவல்களைத் தருமாறு கோரியிருந்தேன். யுத்தத்தின் பின்னர் வவுனியாவில் 32,017 ஹெக்டேயர் காணியும் முல்லைத்தீவில் 64,314 ஹெக்டேயர் அளவு காணியும், வனவளத் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக, அறியத்தந்துள்ளார். மற்றைய மாவட்டங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை. காடுகளின் அவசியம், சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பாக யாரும் சொல்லி எங்களுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், எங்கள் வாழ்நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் சூழல் பாதுகாப்பு என்ற முகமூடியை அணிந்து கொண்டு இந்த அரசு பறிப்பதை, ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது' என, மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .