2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

‘வாக்குறுதி சறுக்கினால் போராட்டம் வலுப்பெறும்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கு சரியான நீதியும் விரைவான செயற்பாடும் இடம்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் நாம் எமது கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். ஜனாதிபதியின் வாக்குறுதி ஒரு மாதகாலப் பகுதியில் நிறைவேற்றப்படாவிடின், மாணவர்களாகிய எங்களது போராட்டங்கள் வலுப்பெறும்” என, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவ ஒன்றியத் தலைவர் க.ரஜீவன்  தெரிவித்தார். 

யாழ். பல்கலைக்கழகத்தில், நேற்றுப் புதன்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கொக்குவில் குளப்பிட்டியில் கடந்த 21 ஆம் திகதியன்று பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ். பல்கலைகழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக சமூகம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பில், செவ்வாய்க்கிழமையன்று சந்தித்து கலந்துரையாடியது. அந்தக் கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,  

“எமது சக மாணவர்கள் இருவர், இவ்வாறு ஒரு சம்பவத்தில் உயிரிழந்தமை, எமக்குப் பெரும் மனவேதனையினை ஏற்படுத்தியது. இருந்தும் உயிரிழப்புக்குச் சரியான நீதி வேண்டி நாம் பல போராட்டங்களைத் தொடர்ந்தோம், கற்றல் செயற்பாடுகளை முற்றாக இடைநிறுத்தினோம். 

இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளையும் கடந்த திங்கட்கிழமை (31) முடக்கி, எமது போராட்டத்தை தொடர்ந்தோம். இதன்போது, யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் உங்களது கோரிக்கையினை நீங்கள் ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என்றும் கூறினார். 

அதற்கிணங்க, ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்துக் கலந்துரையாடினோம். எமது கோரிக்கையையும் முன்வைத்தோம். 

எமது நண்பர்கள் இருவரின் உயிரிழப்புக்குச் சரியான நீதி வேண்டும், உண்மைத்தன்மை வெளிப்படுத்தபட வேண்டும், பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும். ஆகிய கோரிக்கையினை முன்வைத்தோம். 

எமது கோரிக்கைளை நிராகரிக்காது ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இரண்டு அல்லது மூன்று வார காலப்பகுதிக்குள் குற்றப்பத்திரம் மேல் நீதிமன்றுக்குத் தாக்கல் செய்து நீதியான அணுகுமுறை இடம்பெறும் எனவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தவுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தேவை எதுவோ அதனடிப்படையிலான நஷ்ட ஈட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும். இவை அனைத்தும் ஒரு மாத கால இடைவெளியில் இடம்பெறும் எனத் தெரிவித்து, அதுவரையில் மாணவர்கள் குழப்பம் இன்றி கற்றல் செயற்பாடுகளை ஆரம்பியுங்கள் எனத் தெரிவித்தார். 

இனிமேல் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறாமல் இருப்பதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தபடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார் என மாணவ ஒன்றியத் தலைவர் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் வாக்குறுதியினை நம்பி உங்கள் போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளீர்களா? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த மாணவ தலைவர்,  “நாட்டில் எப்பகுதியானாலும் இடம்பெறும் பிரச்சினைக்கு ஜனாதிபதியே இறுதியில் பதிலளிக்கவேண்டும். அந்தவகையில் எமது போராட்டமானது வலுப்பெற்று உச்சக்கட்டத்துக்கு சென்றிருந்தது.

அதனால்தான், ஜனாதிபதியை சந்தித்து எமது கோரிக்கையை முன்வைத்தோம். எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒரு மாத காலத்தில் அதனை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என நம்புகிறோம். இதற்கிடையில் நாம் எமது நண்பர்கள் இருவரின் மரணம் தொடர்பில் விழிப்பாகவே இருக்கிறோம். போராட்டத்தைக் கைவிடவில்லை. கற்றல் செயற்பாடுகளை மட்டுமே ஆரம்பித்துள்ளோம். போராட்டம் ஏதோ ஒரு வகையில் இடம்பெறும். உறுதி மொழிகள் ஒரு மாத காலத்தில் நிறைவேற்றபடாத பட்சத்தில் மீளவும் எமது போராட்டம் வலுப்பெறும் என மாணவ தலைவர் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X