2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'விடுதலையான மகன் இன்னும் வீடு வரவில்லை'

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

விடுதலை செய்யப்பட்ட மகன் இன்னமும் வீடு வந்து சேரவில்லை. இருந்தும், மகன் திரும்பி வருவார் என நம்பிக்கொண்டிருப்பதாக காணாமற்போன கந்தசாமி சயந்தன் (காணாமற்போகும் போது வயது 18) என்பவரின் பெற்றோர், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்தனர்.

சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (29) நடைபெற்றது. இதன்போதே, மேற்படி பெற்றோர், சாட்சியமளித்தனர். அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்கள் கூறியதாவது,

'மந்துவில் சிறிபாரதி மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த எமது மகன், 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று பாடசாலைக்கு வீடு திரும்பவில்லை. சிறிது நாட்களின் பின்னர், மகன் தங்களுடன் இருப்பதாக விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூறினர்.

இந்நிலையில், 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதியன்று, உயிலங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சுற்றிவளைப்பில் சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களில் எமது மகனும் இருந்தார். இதயவீணையில் எமது மகனின் பெயரும் சொல்லப்பட்டது.

இதன் பின்னர், புதைந்த இராணுவ ஜீப் வண்டியை சிலர் தள்ளிக்கொண்டு நிற்பது போன்ற படம், பத்திரிகையொன்றில் கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வெளியானது. அப்படத்தில் எமது மகனும் காணப்பட்டார்.

2007ஆம் ஆண்டுக்கும் 2008ஆம் ஆண்டுக்கும் இடையில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் 200பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாக தென்றல் வானொலியில் பெயர் விவரம் வாசிக்கப்பட்டது. அதில் எமது மகனின் பெயரும் வாசிக்கப்பட்டது. ஆனால், மகன் இன்றுவரை திரும்பி வரவில்லை' என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X