2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 150 இற்கும் அதிகமானோர் கைது

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட 150 இற்கும் மேற்பட்டவர்கள் கடந்த வாரம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்  தண்டனை வழங்கப்பட்டதாக  யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகுகநேசன் தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில்  நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

'யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் இடம்பெற்ற தேடுதல் சோதனையின்போது  மதுபோதையில் வாகனம் செலுத்திய 45 பேரும் நீதிமன்றத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 28 பேரும் அனுமதிப்பத்திரமின்றி மதுபான  விற்பனையில் ஈடுபட்ட 6 பேரும்  கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரும் வீதிகளில் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழுல் பாதிப்படையும் வகையில் நடந்துகொண்ட 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37 பேரும் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த 6 பேரும் கஞ்சா விற்பனை செய்த 4 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 பேரும் வீதிகளில் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழுல் பாதிப்படையச் செய்த 4 பேரும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட்டன' என்றார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களுக்கான அனுமதி வழங்கும் பொறுப்பும் கடமையும் எனக்கு உரியது. இதனையிட்டு நானே கொழும்பில் உள்ள பொலிஸ் உயர்பீடத்திற்கும் பதில் கூறுகின்றேன். இந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை  மானிப்பாய் வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் நானே அனுமதி வழங்கினேன்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாது, கலகம் ஏற்படாது எனக் கருதும் சந்தர்ப்பத்தில் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது எனவும் இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகுகநேசன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X