2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

காசநோயால் யாழில் 226பேர் பாதிப்பு

George   / 2014 நவம்பர் 24 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் (2014) தொடக்கத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி வரையில் 226 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட காச நோய் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மணிவாசகன் திங்கட்கிழமை (24) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு 319 பேரும், 2013 ஆண்டு 266 பேரும் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு குறைவான பேருக்கே காசநோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

நலன்புரி முகாம்களில் சன நெருக்கத்தில் வசிப்பவர்களிடமும், இந்தியாவிலுள்ள அகதி முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர்களிடமும், குடியிருப்பாளர்கள் அதிகமாகவுள்ள பகுதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களிடமும், போதைப்பொருள் மற்றும் மதுபாவனை அதிகமாக பயன்படுத்துபவர்களிடமும் காச நோய் தாக்கம் கூடுதலாக கண்டறியப்பட்டுள்ளது.

எயிட்ஸ் நோயாளர்கள் மூலம் காச நோய் பரவுவதற்கு கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் யாழ் மாவட்டத்தில் அவ்வாறு பரவுவது குறைவாக இருக்கின்றது.

நோய் தொடர்பான கல்வியறிவு குறைந்தவர்கள் இந்த நோயை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியம் செய்து, நோய்க்கான சிகிச்சை பெறாமல் இருப்பதனால் காச நோயை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

ஆனால் தற்பொழுது இவ்வாறாக அலட்சியமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் ஊடாக எடுத்து வருகின்றோம்.

இதனால், இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கூடியதாகவுள்ளது.

காச நோய் மருத்துவ முகாம் சங்கானை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, மந்திகை, நெடுந்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில்; ஒவ்வொரு மாதமும் நடைபெறும். அந்த மருத்துவ முகாம்களில் காச நோய் அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனை செய்து பயன்பெற முடியும்.

இரண்டு கிழமைக்கு மேலாக இருமல் மற்றும் சளி காணப்பட்டால், அது காசநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அத்துடன், காசநோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் பல்வேறுபட்ட பிரதேசங்களில் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .