2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வேதனைகளும் சோதனைகளும் அற்ற ஒளியமமானதொரு எதிர்காலம் நோக்கி பயணிக்க வேண்டும்:அமைச்சர் டக்ளஸ்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 14 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கமைய எமது மக்களின் ஒளிமயமான எதிர்காலம் சிறக்க இத்தைத் திருநாள் அமையும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்கள் அமைதியான சூழலில் சமமான அதிகாரங்களையும் உயர்ந்த வாழ்க்கை நிலையையும் பெற்று வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தை திருநாளையொட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், அழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆக்கங்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில் ஒரு சில சமூக சீர்கேடுகளும், அசம்பாவிதங்களும் எம்மை வேதனை கொள்ளச் செய்கின்றன.

இவை அனைத்தும் துடைத்தெறியப்படல் வேண்டும் என்பதற்காகவும் எமது மக்கள் ஒளிமயமானதொரு எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் நாம் தொடர்ந்து உழைத்து வருகின்றோம்.

அதேநேரம் கடந்தகால பாதிப்புக்களின் வடுக்களிலிருந்து மீள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வந்த வேளையில் அண்மைக்கால இயற்கை அனர்த்தம் காரணமாக மீண்டும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் கிழக்கு மாகாண உறவுகளின் துயரங்களை நானும் எனது கட்சியினரும் பகிர்ந்து கொள்வதுடன் அவர்களுக்கான உதவும் திட்டங்களையும் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளோம்.

இம்மக்கள் இத்துயர நிலையிலிருந்து விரைவில் மீள வேண்டுமென்பதுடன் இம்மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதற்கு மனிதாபிமானம் கொண்ட அனைவரும் முன்வர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இழப்புகளின் வேதனையிலும், இயற்கை அனர்த்தங்களின் சோதனையிலுமிருந்து எமது மக்கள் மீண்டு ஒளிமயமானதொரு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்புகளை இத் தை திருநாள் நிச்சயம் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையுடன், அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X