2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சமாதானத்தை வெற்றிகொள்வது என்பது அரசுக்கு கடினமானது: யசூசி அகாஷி

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத், ரஜனி)

இலங்கை அரசாங்கம் யுத்தத்தை வெற்றிகொண்டதைப்போல சமாதானத்தை வெற்றிகொள்வது என்பது இலகுவான விடயமல்ல. தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்கவேண்டும். தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாவிட்டாலும் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் காலதாமதம் ஏற்படாமல்  அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு கூடிய கவனம் எடுக்கும் என்று யசூசி அகாஷி தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான மக்கள் குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஜப்பானைப் பொறுத்தவரையில் அங்கே ஜப்பானியர்கள் மட்டும் வாழ்கின்ற ஒரு நாடு. அங்கே எல்லாம் ஒரே மாதிரியானதாக இருக்கும். இலங்கை பல இனங்கள், பல்வேறுபட்ட கலாசாரத்தைப் பின்பற்றுகின்ற ஒரு நாடாக இருக்கின்றது. அதனால் அது பலமானதாகவும் வாழ்கையை துடிப்பாக்கக் கூடிய நாடாகவும் இருக்கிறது. இதனை அனைவரும் சரியாக பயன்படுத்தி ஐக்கிய இலங்கையை தோற்றுவிக்க உழைக்கவேண்டும்.

தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்திடம் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாவிட்டாலும் சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் மிகவும் கரிசனையோடு இருக்கின்றது. காலதாமதம் ஏற்படாமல் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச நாடுகள் கூடிய கவனம் எடுக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்காது நம்பிக்கையோடு இருக்கவேண்டும்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டது. தற்போது அந்த நிலைமைமாறி சுமூகமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஏ9 வீதி திறக்கப்பட்டு எங்கும் எல்லோரும் சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பல தடவை கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை. அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தியிருந்தால் அவர்கள் நன்மையடைந்திருப்பார்கள்” என்று யசூசி அகாஷி மேலும் அங்கு தெரிவித்தார்.

இன்று தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக நாளை சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கும்போது அவரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அகாஷி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X