2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் சோதனை செய்வது நிறுத்தப்படும்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்
 
யாழ். மாவட்டத்தில் பல இடங்களில் இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் வாகனச் சோதனை மேற்கொள்ளப்படுகின்றமை உடனடியாக நிறுத்தப்படுமென யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றெஹான் டயஸ் நேற்று வியாழக்கிழமை (26) தெரிவித்தார்.
 
சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று (26) யாழ். மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
 
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக பொம்மைவெளி, ஓட்டுமடம், செம்மணி வீதி, அரியாலை, நாயான்மார்கட்டு போன்ற இடங்களில் இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் வாகனங்களை மறித்து ஆவணங்களைச் சோதனை செய்வதுடன், உரிய முறையில் ஆவணங்கள் இல்லாதவிடத்து வாகன சாரதிகளிடம் கையூட்டு வாங்கப்படுவதாக பிரதேச சபைகளின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
 
இதற்குப் பதிலளித்த யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், இது தொடர்பாக எனக்கு இதுவரையிலும் தெரியாதெனவும், இது வரையில் எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையென்றும் தெரிவித்ததுடன், இந்த விடயத்தினை பரிசீலனை செய்வதுடன், உடனடியாக இதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.
 
மாணவனைக் கொலை செய்த குற்றவாளிக்கு அருகில் வந்துவிட்டோம்
உடுவிலில் கோடாரியால் கொத்திக் கொலை செய்யப்பட்ட மாணவனின் கொலை தொடர்பான விசாரணைகள் பூரணப்படுத்தப்படும் தருவாயில் உள்ளது எனவும், மிக விரைவில் கொலைக் குற்றவாளியினைக் கைது செய்வோம் எனவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
 
உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 4ஆம் திகதி புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவரை கோடாரியினால் கொத்தினர்.
 
இதில் படுகாயமடைந்தவர்களில் ஒருவரான யாழ். இந்துக் கல்லூரி மாணவன் சண்முகநாதன் யதுர்ஷனன் (19) சிகிச்சை பலனின்றி கடந்த 7ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
 
இது தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.
 
இந்நிலையில் மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் எந்தளவுக்கு இருக்கின்றன என்பது தொடர்பாக நேற்று (26) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பியபோதே பொலிஸார் பதிலளித்தனர்.
 
வேலணை, காரைநகர், மருதங்கேணியில் பொலிஸ் நிலையங்கள்
யாழ். மாவட்டத்தின் வேலணை, காரைநகர் மருதங்கேணி பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் தெரிவித்தார்.
 
வேலணை, மருதங்கேணி மற்றும் பொன்னாலை பகுதியிலுள்ள தற்காலிக பொலிஸ் காவலரண்களை பொலிஸ் நிலையங்களாக மாற்றித்தருமாறு பிரதேச செயலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
அதற்குப் பதிலளித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்,
 
மேற்படி இடங்களில் பொலிஸ் நிலையத்தினை அமைப்பதற்கு ஏற்ற இடங்களைத் தெரிவு செய்து தருமாறு கூறினார். அத்துடன், தற்போது யாழ்.மாவட்டத்தில் பொலிஸ் ஆளணிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
அத்துடன், கீரிமலை நகுலேஸ்வர ஆலய வளாகத்திலுள்ள பொலிஸ் காவலரண்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
சிவில் பாதுகாப்புக்குழுவின் அடையாள அட்டையைக் காட்டி மதுபானம் அருந்துகின்றனர்
சிவில் பாதுகாப்புக் குழுவின் அடையாள அட்டைகளினை காட்டி இலவசமாக மதுபானம் அருந்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக வேலணைப் பிரதேச சபைத் தவிசாளர் போல் சிவராசா பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
 
அதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றார். அத்துடன் 2014ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் மதிப்புள்ள, கல்விகற்ற நபர்களை சிவில் பாதுகாப்புக் குழுவில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .