2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

ஆலய சுற்றுச்சூழலில் கொட்டப்பட்ட இடிபாடுகளால் மாணவர்கள் பாதிப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

கொக்குவில் ஸ்ரீ கிருஸ்ணகர சிவசுப்ரமணிய சுவாமிகள் கோவிலின் (புதுக்கோவில்) இடிபாடுகள் சுற்றுச்சூழலில் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளமையால் கொக்குவில் இந்துக் கல்லூரிக்குச் சென்று வரும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

கொக்குவில் இந்து கல்லூரி இரண்டு கட்டிடத் தொகுதிகளுக்கு நடுவில் மேற்படி ஆலயம் அமைந்துள்ளதுடன், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கோயில் பக்கமாகவுள்ள இரண்டு வாயில் வழியாகவே சென்று வருவது வழமை. 

இந்நிலையில் மேற்படி ஆலயச் சுற்றாடலில் கட்டிட இடிபாடுகள் வீதி மறிப்புப் போலக் கொட்டப்பட்டு இருப்பதினால் தாம் பாடசாலைக்கு சென்று வருவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இரவு வேளைகளில் இப்பகுதியினால் வருபவர்களும் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாவது நடைபெற்று வருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் ஆலய நிர்வாகத்திடமும், நல்லூர் பிரதேச சபையிடம் முறைப்பாடுகள் செய்திருந்தனர்.
இது தொடர்பாக ஆலயக நிர்வாகச் செயளாலர் செல்வறஞ்சனிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது,

இந்த ஆலயம் 22 பரப்புக் காணியில் அமைந்துள்ளது. ஆலய அமைவிடம் போக மீதி இடமே ஆலய சுற்று வீதியாக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஆலயத்திற்கு சொந்தமான இடத்திலேயே ஆலய இடிபாடுகள் குவிக்கப்பட்டுள்ளன.

இதனை உறுதிபடுத்தும் வகையில் 56 ஆவது பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் ஆலயத்தின் உறுதியினை நல்லூர் பிரதேச சபை தம்மிடம் காண்பிக்குமாறு கேட்டதிற்கிணங்க ஆலய உறுதி பிரதேச சபையிடம் காண்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பரமலிங்கம் வசந்தகுமார் தொடர்புகொண்டு கேட்டபொழுது,
இந்த விடயம் சம்பந்தமாக நல்லூர் பிரதேச சபை கவனத்திலெடுத்துள்ளது. இந்த ஆலய சுற்றுச்சூழலில் குவிக்கப்பட்டுள்ள இடிபாடுகளினை அப்புறப்படுத்துமாறு ஆலய நிர்வாகத்தினருக்கு கடிதம் அனுப்பியிருந்தும், அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

தொடர்ந்து அப்புறப்படுத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினருக்கு கால எல்லை வழங்கப்பட்டுள்ளது. இக்கால எல்லை இன்றுடன் முடிவடைகின்றது. 
இன்று அவர்கள் இதனை அகற்றாத பட்சத்தில் சட்ட ரீதியாக அகற்றுவதற்கான நடவடிக்கையினை நல்லூர் பிரதேச சபை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .