2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

வரவு –செலவுத்திட்ட கொடுப்பனவுகளுக்கு அங்கீகாரமளியோம்: கருணானந்தராசா

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு – செலவுத்திட்டத்தின் கொடுப்பனவு தொடர்பான பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கமாட்டோம் என நகர சபை ஐந்து அதிருப்தி உறுப்பினர்களில் ஒருவரான  கோ.கருணானந்தராசா தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் முதலாவது வரவு –செலவுத் திட்டம் டிசம்பர் 17 ஆம் திகதி தவிசாளர் என்.அனந்தராஜாவினால் சமர்ப்பிக்கப்பட்ட போது, 9 சபை உறுப்பினர்களில் 5 பேர் எதிராகவும் 2 பேர் ஆதராவாகவும் வாக்களித்தமையினால் வரவு – செலவுத்திட்டம் 3 வாக்குகளால் தோல்வியடைந்தது. 

தொடர்ந்து இரண்டாவது தடவையாக வரவு – செலவுத்திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி சபையில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, முதலாவது வரவு – செலவுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களித்த 5 உறுப்பினர்களும் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள விடாமல் பொதுமக்களினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதனால் வரவு – செலவுத்திட்டம் சபையிலிருந்த 4 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிக்க ஏகமனதாக நிறைவேறியது.

 இந்நிலையில், மேற்படி அதிருப்தி உறுப்பினர்களான எஸ்.எக்ஸ்.குலநாயகம், உப தலைவர் க.சதீஸ், ம.மயூரன், கோ.கருணானந்தராசா, ச.பிரதீபன் ஆகிய ஐந்து பேரும் தங்களின் அனுமதி பெறாமல் நிறைவேற்றப்பட்ட மேற்படி வரவு – செலவுத் திட்டத்தினை ரத்துச் செய்யும்படி, தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர், தேர்தல் ஆணையாளர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்தனர்.

அத்துடன், தங்கள் முறைப்பாடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான தீர்வு வரும் வரை, இம்மாதம் நடைபெறவுள்ள மாதாந்த அமர்வில் நகர சபைச் செயலாளரினால் முன்வைக்கப்படும் கொடுப்பனவும் தொடர்பான பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்குவதில்லையென மேற்படி அதிருப்தி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இவர்கள் அங்கீகாரம் வழங்காவிட்டால், 2014 ஆம் ஆண்டுக்கான திண்மக் கழிவகற்றல், குடிநீர் விநியோகம், வீதித்துப்பரவு அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பொதுமக்களின் நலன்புரிச் சேவைகள், மற்றும் நகர சபை அலுவலர்களின் சம்பளங்கள், உறுப்பினர்களின் கொடுப்பனவுகள், யாவும் முடக்கப்படலாம் என்று வல்வெட்டித்துறை நகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிருப்தி உறுப்பினர்களின் ஒருவரான கோ.கருணானந்தராசாவுக்கு எதிராக கப்பம் பெற்றமை, சிற்றுண்டிச்சாலை இலஞ்ச ஊழல் என்பன தொடர்பாக பொதுமக்களினால் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளுராட்சி அமைச்சர், காவல்துறையினர் ஆகியோரிடம் கட்நத சில மாதங்களுக்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .