2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஒற்றையாட்சி முறையை மாற்ற வேண்டும்: சி.வி

Menaka Mookandi   / 2014 ஜனவரி 05 , பி.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சொர்ணகுமார் சொரூபன்

புதிய அரசியலமைப்பினூடாக ஒற்றையாட்சி முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (05)  தெரிவித்தார்.

எஸ்.ஓ.எஸ். நிறுவனத்தினால் யாழ்., நாயன்மார்கட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் கிராமத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒஸ்ரியாவில் தலைமையகத்தினைக் கொண்ட எஸ்.ஓ.எஸ். நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட மேற்படி சிறுவர் கிராமத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். உலகின் 133 நாடுகளில் இவ்வாறான சிறுவர் கிராமங்களை உருவாக்கியுள்ள மேற்படி நிறுவனம் அனாதரவான சிறுவர்களின் வளர்ச்சிக்கு கைகொடுத்து வருகின்றது.

இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'ஒரே நாடு, ஒரே மக்கள்... என்று மேடைக்கு மேடை தென்னிலங்கை அரசியல்வாதிகள் பேசுவதில் எந்தப் பயனுமில்லை. இலங்கை வெவ்வேறு பின்புலங்கள் கொண்ட மக்களைக் கொண்ட நாடாகும்' என்று கூறினார்.

'இது சிங்கள பௌத்த நாடு என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்கள் அல்ல. தமிழர்கள் இலங்கை நாட்டின் பெரும்பான்மையினராக வாழ்ந்த வரலாறுகளும் உண்டு. இந்த வரலாறு தற்போது மாற்றியமைக்கப்பட்டு இலங்கையிலுள்ள ஒவ்வொரு அரச மரமும் சங்கமித்த நட்ட மரம், இராவணன் சிங்கள மன்னன் என்று வரலாறு தவறாக மாற்றப்பட்டு வருகின்றது' என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். 

'சிங்கள மொழி கிறிஸ்துவுக்கு பின்னரே புழக்கத்திற்கு வந்தது. ஆனால் இராவணன் அதற்கு முந்திய புராணங்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்தவர். நேரடியாக இங்கு வரலாறு மாற்றியமைக்கப்படுகின்றது. இந்த வரலாறு மாற்றியமைக்கப்பட்டு எதிர்கால சிறுவர் சிறுமியரிடம் தவறாக கூறப்படுகின்றது. இதனால் பிழையான வரலாற்றினையே மாணவ, மாணவிகள் கற்கின்றனர். இதனால் இனக்கிளர்ச்சிகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றன' என்று அவர் குறிப்பிட்டார்.

'இலங்கையிலுள்ள வரலாற்று ஆய்வாளர்கள் 1948ஆம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையின் உண்மையான வரலாறு பற்றி ஆய்வு செய்து உண்மையான வரலாற்றினை வெளியிட வேண்டும், அப்போதே இலங்கையில் தமிழர்கள் எந்நிலையில் பெருன்பான்மையினராக இருந்தனர் என்பது புலப்படும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் இராணுவக் குவிப்பு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல. இலங்கையில் 9 மாகாணங்கள் இருக்கின்றன. 9 மாகாணங்களிலும் சமமாக இராணுவத்தினரை பங்கீடு செய்யலாம். அதைவிடுத்து வடக்கு, கிழக்கிற்கு மட்டும் அதிகளவான இராணுவத்தினர் தேவையற்றதொன்று' என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

'யுத்தத்தில் காணாமல் போனவர்கள் பற்றி இக்கிராமத்தினை உருவாக்கிய எஸ்.ஓ.எஸ். நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இக்கிராமத்தில் இருக்கும் சிறுவர்கள், பெற்றோர்களை இழந்து இந்நிலைக்கு வருவதற்கு யுத்தமும், யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளுமே காரணம். அத்துடன், இக்குழந்தைகளில் பலரின் பெற்றோர் காணாமற்போயும் உள்ளனர்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .