2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாணத்தில் பொலித்தீனுக்கு தடை

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 06 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-சுமித்தி தங்கராசா, சொர்ணகுமார் சொரூபன்

உலக சுற்றுச்சூழல் தினமான ஜுன்  05ஆம் திகதியிலிருந்து வடமாகாணத்தில்  20 மைக்ரோவிற்கு குறைவான பொலித்தீன் பாவனைத் தடை அமுல்படுத்தப்படுமென்பதுடன், இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்னும் தலைப்பில் வடமாகாண விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'20 மைக்ரோவும் அதற்கு குறைவான தரமுள்ள பொலித்தீன் பைகள் பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம்  தடைசெய்துள்ளது.

இருப்பினும்,  தரம் குறைந்த பொலித்தீன் பைகள் தென்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு வடமாகாணத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு  20 மைக்ரோவிற்கு குறைவான பொலித்தீன்களை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்.

மேலும், பொலித்தீன் பைகளின் தரத்தை ஆய்வு செய்வதற்கான ஆய்வுகூடங்கள் வடமாகாணத்தில் இல்லை.

20 மைக்ரோவிற்கு குறைவான பொலித்தீன்களிலிருந்து வெளியிடப்படும் டயோக்ஷின் வாயுவினால் அங்கக் குறைபாடுகள், மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

வியாபாரிகள் உட்பட  இதுவரைகாலமும் பொலித்தீன்களை பயன்படுத்தி வந்தவர்கள் எதிர்காலத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டும். இதற்கான கால அவகாசம் தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் இவ்வாறு சட்டத்திற்கு முரணாக (20 மைக்ரோவிற்கு குறைந்த) பொலித்தீன்கள் விற்பனையாவது தொடர்பில் பொலிஸார்
நடவடிக்கை எடுப்பதற்கு தவறுவதுடன், அரசாங்க அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு  பாராமுகமாக உள்ளனர்.

பாடசாலை மட்டத்திலிருந்து பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டுமென்பதுடன்,  இன்றிலிருந்து பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுகளும் முன்னெடுக்கப்படும். இதற்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள், வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரெல்லா ரத்னியூட், யாழ். வணிகர் கழகத தலைவர் ஆர்.ஜெயசேகரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .