2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வலி.வடக்கு மக்களை வெளியேறுமாறு காணி உரிமையாளர்கள் கூறுகின்றனர்: சஜீவன்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து உடுப்பிட்டியிலுள்ள தனியார் காணிகளிலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு காணி உரிமையாளர்கள் 16 பேர் கூறிவருவதாக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலம்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்கள் தன்னிடம் முறைப்பாடு தெரிவித்ததாக வலி.வடக்கு மீள்குடியேற்றக்குழுவின் தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்தார்.  

1990 ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கில் இருந்து வெளியேறிய மக்கள் யாழ்.மாவட்டத்தில் தனியார் காணிகளிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் உடுப்பிட்டியிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறி தங்கள் காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்களும் உரிமையாளர்களின் உறவினர்களும்  இடம்பெயர்ந்த மக்களிடம் கோரி வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரச அதிகாரிகளும்  உடந்தையாகச் செயற்படுவதாக இடம்பெயர்ந்த மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக சஜீவன் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் தனியார் காணிகளிலேயே வசித்து வருகின்றனர். வலி. வடக்கில் இருந்து வெளியேறிய மக்களை மீள்குடியேற்றுவோம் என்று அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்களை காணிகளில் இருந்து வெளியேறுமாறு  அச்சுறுத்துவது கண்டிக்கத்தக்கது. இந்த விடயத்திற்கு அரச அதிகாரிகள் துணைபோகாமல் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் கரிசனையோடு செயற்படவேண்டும் என்று சஜீவன் கூறினார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார் என்று சஜீவன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .