2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வாள்வெட்டுச் சம்பவம்: ஒருவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

சுன்னாகம் மதவடி லேன் பூதராயர் ஆலயத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (1) மதியம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியலும், மேலும் இருவரை தலா 50,000 ரூபா சரீர பிணையிலும் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பஷPர் மொஹமெட் புதன்கிழமை (02) உத்தரவிட்டார்.

பூதராயர் ஆலயத்தில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீதுமேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் அதேயிடத்தினைச் சேர்ந்த சிவனடியார் சிவலிங்கநாதன் (53), சுவாமிநாதன் அரசதாசன் (44), இ.இராமேஸ்வரன் (64) ஆகியோர் படுகாயமடைந்து தெல்லிப்பழை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சிவில் பாதுகாப்புக் குழுவினைச் சேர்ந்த ஒருவர் செவ்வாய்க்கிழமை (01) சுன்னாகம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் தகாத உறவு காரணமாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு உடந்தையாக பெண்ணொருவரும், வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய ஒருவரும் இருப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து புதன்கிழமை (02) இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

தொடர்ந்து மேற்படி மூவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, முதலாவது சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும், பெண்ணையும் மற்றைய நபரையும் 50,000 ரூபா சரீர பிணையிலும் செல்லவும் நீதவான் அனுமதியளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .