2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ்.மாநகர முதல்வர் கையூட்டுக் கேட்கிறார்

Kogilavani   / 2014 மே 23 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் அவரது செயலாளராகவிருக்கும் அவரது கணவர் பற்குணராஜா ஆகியோர் கையூட்டுக் கேட்பதாக தான் அறிந்ததாக வடமாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.

இதன்போது, மாநகர சபையில் இடம்பெறும் குளறுபடிகள் தெடர்பாக பிரேரணையொன்றினை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'வெளிநாடுகளிலிருந்து வந்து யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் முதலீடுகளை செய்ய முயல்பவர்களுக்கு யாழ்ப்பாணம் மாநகரசபை பெரும் இடையூறாக காணப்படுகின்றது.

அண்மையில் கூட வெளிநாட்டில் இருந்து வந்த தனவந்தர் ஒருவர் முதலீட்டை செய்யும் முகமாக யாழ்ப்பாணம் மாநகர சபையில் கட்டடிட விண்ணப்பத்தை ஒப்படைத்து ஏழு மாதங்களாகின்ற போதிலும் இது வரைக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அந்த வரைபடத்தை அங்கீகரிப்பதற்க்கு யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும் செயலாளராக இருக்கும் அவருடைய கணவரும் கையூட்டுக் கேட்கின்றார்கள்.

இந்த வகையில் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் இத்தகைய சம்பவங்கள் பற்றிய விசாரனைகளையும் மேற்க்கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவைத்தலைவர் கருத்துக்கூறுகையில்,

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மீது வெகு விரைவில் விசாரணைகளை  மேற்க் கொள்வதற்;கான நடவடிக்கைகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொண்டு வருகின்றார்.

விசாரணைக் குழு அமைக்க உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மூவரை தெரிவு செய்து ஆரம்ப நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆகவே இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .