2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மக்கள் காணிகளை மட்டுமே கேட்கின்றனர்: விநாயகமூர்த்தி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 08 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

பணமோ, மாற்றுக் காணிகளோ வேண்டாமென்பதுடன், தங்களது  காணிகளே வேண்டும். அதை  எப்படியாவது மீட்டுத் தாருங்களென்று வலி. வடக்கு மக்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

'வலி. வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடுத்த தவணை எதிர்வரும் ஆவணி மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வலி. வடக்கில் இன்னமும் 30,000 பேர் மீள்குடியேற்றப்பட வேண்டும். இந்நிலையில்,  தையிட்டியில் 3,000  பேரும் மயிலிட்டியில் 5,000 பேரும் மீள்குடியேற்றப்பட வேண்டுமெனக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம்.

இதில் வலி. வடக்கைச் சேர்ந்த 3,000  பேருக்காக நான் நீதிமன்றத்தில் வாதாடுகின்றேன். அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டது என்னவெனில், பணத்தையோ அல்லது மாற்று இடத்தையோ எடுத்துத் தர வேண்டாமென்றும் தங்களது நிலத்தை மீட்டுத் தருமாறே என்னிடம் கேட்டுள்ளனர்.

மேலும் தையிட்டி, மயிலிட்டியை சேர்ந்தவர்களை வளலாய் வடக்கில் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிந்தேன். அதற்கு வளலாய் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே வளலாய் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த 280 குடும்பங்கள் தற்போது திக்கம் பகுதியில் குடியேறியுள்ளனர்;. அவர்கள் தம்மை முதலில் வளலாய் வடக்கில் குடியேற்றிவிட்டு, வேறு இடத்தவர்களை அங்கே குடியேற்றுங்களெனத் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு விரைவில் இலங்கை வரவுள்ளது. அக்குழு யுத்தம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவிருந்தாலும், யுத்தத்தின் பின்னரான இவ்வாறான காணி சுவீகரிப்புக்கள் தொடர்பிலும் அக்குழுவிடம் நாம் முறையிடலாம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .