2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இனவாத அரசை வீட்டுக்கு அனுப்பி ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்: தியசேன தேரர்

Menaka Mookandi   / 2014 ஜூலை 15 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


இனவாத அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜனநாயக ஆட்சியினை இந்த நாட்டில் உருவாக்க வேண்டும். அதற்கு நாம் தமிழ், சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும் என பௌத்த மதகுருவும் மனித உரிமை செயற்பாட்டாளருமான வந்திப தியசேன தேரர் இன்று செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெறவிருந்த போராட்டம் கண்டனக் கூட்டமாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

'கடந்த 30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தம் நிறைவடைந்துள்ளது. ஆனால் இந்த யுத்தம் எதனால் ஏற்பட்டது என்று ஆராயாமலும், அதன் பின்னணியை ஆராயாமலும், இனியும் இப்படி ஒரு யுத்தம் நடைபெறக் கூடாது என்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.

மாறாக இந்த இனவாத அரசாங்கம் அப்படித்தான் அவர்களை (விடுதலைப் புலிகளை) அடித்தோம், இப்படித்தான் அவர்களை அடித்தோம் என்று தொடர்ச்சியாக சிங்கள மக்கள் மத்தியில் கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றது. இந்நிலை மாறவேண்டும்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் சொந்த காணிகளில் நிம்மதியாக வாழவேண்டும். அதற்கு அவர்களின் சொந்த காணிகளை அரசாங்கம் கையளிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த இனவாதம் பேசும் அரசாங்கத்தை நாங்கள் ஒன்றிணைந்து போராடி இவர்களை ஆட்சி பீடத்தில் இருந்து அனுப்ப வேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற வேறுபாடின்றி இந்த இனவாத அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஒரு ஜனநாயக ஆட்சியினை இந்த நாட்டினிலே உருவாக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தான் அன்று யுத்தம் நடைபெற்று மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று முழு இலங்கையும் இந்த அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என எல்லா சக்திகளையும் நான் பிரார்த்திக்கின்றேன்' என மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .