2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வாழ்வாதர உதவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படவில்லை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் வழங்கப்படும் உதவிகளை சிறந்த முறையில் அம்மக்கள் பயன்படுத்துவதில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் க.கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.

தென்மராட்சி நலசேவைகள் சங்கத்தின் பொதுக்கூட்டம் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) மாலை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே விரிவுரையாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

உதவித் திட்டங்களை வழங்குவதற்கு சரியான பயனாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது. இதனால், உதவித் திட்டங்களை பொதுவாகப் பயன்படக்கூடியவாறு கல்வி அபிவிருத்தியில் பயன்படுத்துவது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

தென்மராட்சிப் பிரதேசத்தின் மீள்குடியேற்றம் இடம்பெற்ற போது, தென்மராட்சி நலசேவைகள் சங்க உருவாக்கப்பட்டு, மீள்குடியேறும் மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவிகளை புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் இருந்து பெற்று வழங்கியது.

இந்நிலையில், மேற்படி சங்கத்தினால் இதுவரைகாலமும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இனிவருங் காலங்களில் தென்மராட்சிப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அந்தவகையில், தென்மராட்சிப் பிரதேசத்தில் மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப கூடம் ஒன்று இச்சங்கத்தினால் அமைக்கப்படவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கூட்டத்தின் முடிவில் நடப்பாண்டு நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டதுடன், அதன் தலைவராக தொடர்ந்தும் க.கந்தசாமி தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், இனிவரும் காலத்தில் தென்மராட்சியில் சகல பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .