2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புகையிரதத்தில் யாழிற்கு தபால்: தபால் மா அதிபர்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா


27 வருடங்களுக்கு முன்னர் இருந்தது போல தபால் பொதிகள் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் புகையிரதம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளதாக இலங்கை தபால் மா அதிபர் ரோஹண அபயரத்ன வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.

உலக அஞ்சல் தினமான இன்று, யாழ் அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தை முக்கியமாக கொண்டு யாழ். அஞ்சல் நிலையத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றன. இன்றைய நிகழ்வு எதிர்காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

எதிர்வரும் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் 14ஆம் திகதி முதல் தபால் பொதிகள் புகையிரதம் மூலம் எடுத்து வரப்படவுள்ளன. 27 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது போன்ற தபால் சேவை தற்போது வர இருப்பது முக்கியமானதாகும்.

இந்த வடக்கு - தெற்கு புகையிரத சேவை வடக்கு தெற்கு மக்களை இணைப்பது போல வடக்கு தெற்கு சேவையாளர்களையும் இணைக்கும் சேவையாக அமையவுள்ளது. எமது நாட்டிலுள்ள பல திணைக்களங்களில் சிறந்த பணியாற்றுகின்ற ஒரு திணைக்களமாக தபால் திணைக்களம் விளங்குகின்றது.

இத்திணைக்களம் எதிர்கால சந்ததியினரின் நலன்கருதி தொலைத்தொடர்பு மற்றும் பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பொதிகள் சேவை, தொலைபேசி கட்டண சேவை, சிற்றிலிங் தொலைபேசி விற்பனை சேவை, ஒன்லைன் பரீட்சை சேவை உள்ளிட்ட 4 சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வடமாகாண பிரதம தபால் அதிபர் என்.ரட்ணசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் உப தபால் அதிபர்கள் உட்பட தபால் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .