2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் பாரிசவாத நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 28 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா

பாரிசவாத நோய் புற்றுநோய், மாரடைப்பு நோய்களுக்கு அடுத்ததாக இலங்கையில் தற்போது 3 ஆவது இடத்தை பெற்றுள்ளது. இந்நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே இந்த நோய் தாக்குகின்ற போதிலும் தற்போது இளவயதினரையும் தாக்குகின்றது. இலங்கையில் வருடத்திற்கு 25000 பேர் இந்த நோயால் பாதிப்புக்குள்ளாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நோயானது உயர்குருதி அமுக்கம், குருதியில் கொழுப்பு தன்மை அதிகரித்தல், இதயத்துடிப்பு குறைதல், மற்றும் நீரிழிவு போன்ற நோயாளர்களையே அதிகம் பாதிக்கின்றது. அத்துடன் தற்போது மதுபான பாவனை அதிகரிப்பு, புகையிலை பாவனைகளாலும் இந்த நோய் அதிகரிக்கின்றது. இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டு நாலரை மணித்தியாலயங்களுக்குள் உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் முற்றாக நோயை குணப்படுத்தலாம்.

யாழ். போதனா வைத்தியசாலையில் உடனடியாக சிகிச்சை பெற்ற 12 நோயாளர்கள் தற்போது பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நோய் சிலருக்கு பல தடவைகளும் வரும். அந்த வகையிலே 3 ஆவது தடவையாக பாரிச வாதம் வந்த நோயாளிக்குகூட தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இதில் முக்கியமான விடயம் இந்த நோய்க்குரிய அறிகுறிகள் தென்பட்டு நாலரை மணித்தியாலயத்திற்குள் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதே ஆகும். அவ்வாறு வழங்குவதன் மூலம் நோயை பூரணமாக குணப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

பாரிசவாதம் என்பது மூளைக்குரிய குருதியின் அளவு குறையும்போது அல்லது மூளைக்குரிய குருதிக்கலன்களில் சிதைவு ஏற்பட்டு குருதிப்பெருக்கு ஏற்பட்டு உருவாகும் குணங்குறிகளே.80 தொடக்கம் 85 வீதமான பாரிசவாதம் மூளைக்குரிய குருதியின் அளவு குறையும் போது ஏற்படுகின்றது.
பாரிசவாதத்தின் அறிகுறிகள் எந்த மூளையின் பகுதி பாதிப்பு அடைகிறது என்பதை பொறுத்து வேறுபடும். இதன் விளைவுகள் சில நிமிடங்களுக்குள்ளோ அல்லது சில மணித்தியாலங்களுக்குள்ளோ வெளிக்காட்டப்படுகின்றது.

இந்த நோய் இலங்கையில் தற்போது 100 பேரில் ஒருவருக்கு எற்படுவதாக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் வருடத்தில் 25000 மக்கள் இந்நோய்க்கு இலக்காகி வருவதோடு வருடந்தோறும் இந்நோய்த்தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இந்நோயை தடுப்பதற்கு 85 சதவீதம் வாய்ப்புக்கள் உண்டு. வயது அதிகரித்தவர்களையே இந்நோய் அதிகளவில் தாக்குவதோடு, அதிலும் குறிப்பாக ஆண்களையே அதிகளவில் தாக்குகின்றது. ஆனால் இந்நோய் ஏற்பட்டு இறந்தவர்களில் பெண்களே அதிகம்.

பாரிசவாத நோயை ஏற்படுத்துவதற்குரிய முக்கிய காரணிகள்

அதி உயர் இரத்த அழுத்தம், புகைத்தல், நீரிழிவு நோய், இதய நோய்கள். உயர் கொலஸ்ரோல், அதிக உடற்பருமன், அதிகரித்த மதுபாவனை என்பன இதற்கான காரணிகளாக காணப்படுகின்றன.
பாரிச வாதத்தின் அறிகுறிகள் எந்த மூளையின் பகுதி பாதிப்படைகிறது என்பதை பொறுத்து வேறுபடும்.

ஊடலின் ஒருபக்க முகம், கை, கால் பகுதிகளில் சடுதியாக ஏற்படும் உணர்சியற்ற தன்மை அல்லது அசைக்க முடியாத தன்மை. ஒருவரில் சடுதியாக  தொடுகை, வெப்பம், நோ என்பவற்றை உணரும் தன்மை குறைவடைதல்.சடுதியாக ஏற்படும் பேச, எழுத முடியாத தன்மை அல்லது பேசுவதை எழுதுவதை கிரகிக்க முடியாத தன்மை.

ஞாபகமற்ற தன்மை மற்றும் குழப்பமான தன்மை

தலைச்சுற்று, சடுதியாக ஒருகண்ணில் அரைவாசி பார்வை பகுதியில் ஏற்படும் பார்வைக்குறைபாடு. தலைவலி, உணவு விழுங்குவதில் சிக்கல், பயம், பதட்டம், கோபம் அல்லது வெறுப்பு போன்றவை ஏற்படலாம். மேற்குறித்த விடயங்கள் அல்;லது அறிகுறிகள் தென்பட்டு அவை சில நிமிடங்களில் அல்லது சில மணித்தியாலயங்களுக்குள் பழைய நிலமைக்கு வருதல் தற்காலிக பாரிசவாதமாக கருதப்படுகின்றது.

பாரிசவாத நோய் ஏற்பட்டு நாலரை மணித்தியாலயங்களுக்குள் அவரை மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லுமிடத்து அவரின் நோயை முற்றுமுழுதாக குணப்படுத்துவதற்குரிய வாய்ப்பு உள்ளது.

மாறாக கால தாமதமாகுமிடத்து மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறைவடைந்து மூளைக்கலன்கள் இறக்கும் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் பாரிசவாத நோயாளியினுடைய குணங்குறிகள் நிரந்தரமாகி விடுகின்றது. எனவே இந்த பொன்னான நாலரை மணித்தியாலத்திற்குள் நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் உப்பு சேர்க்கும் அளவு அதிகம்

யாழ்ப்பாத்தில் பொதுவாக உணவுப்பழக்க வழக்கம் சரியான முறையில் பேணப்படுவதில்லை. உணவுகளில் உப்பு சேர்க்கும் அளவு அதிகமாகவே உள்ளது. ஒருவர் சராசரியாக ஒருநாளுக்கு 1 தேக்கரண்டி உப்பையே பயன்படுத்த வேண்டும்.

அதேபோல 6 தேக்கரண்டி வெல்லத்தையே பயன்படுத்த வேண்டும். அத்துடன் நாளுக்கு 400 கிராம் மரக்கறியையே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாஜரின் பாவனை தற்போது உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு ஆபத்தான உணவு செயல்முறையாகும். இதன் மூலம் குருதி அமுக்கத்தை ஏற்படுத்துகின்றது.

அத்துடன் பொரிக்கும் எண்ணெய்கள் மாற்றப்படாது மீண்டும் மீண்டும் அதே எண்ணெய்யில் பொரிக்கிறார்கள். இது கொலஸ்ரொல் நோயை ஏற்படுத்துவதற்கு வழி செய்கிறது. நோயாளர்கள் தொடர்ச்சியான மருத்துவத்தை பெற்றுக்கொள்வதில்லை.

புகைத்தல் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்

இந்நோய் உரியவர்கள் புகைத்தலை உடனடியாக நிறுத்த வேண்டும். புகைத்தல் பொதுவாக உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் காரணியாக இருந்தாலும் பாரிசவாத நோயாளர்களையும் பெரிதும் பாதிக்கின்ற காரணியாகவே காணப்படுகின்றது. இந்த நோயை கண்டறிந்த பின்னர் புகைத்தலை முற்றாக நிறுத்த வேண்டும்.

மன உளைச்சலும் முக்கிய காரணி

பாரிச வாதத்திற்குரிய முக்கிய காரணியாக மன உளைச்சலும் காணப்படுகின்றது. போதிய நித்திரை, தியானம், உடற்பயிற்சி என்பன மனிதனுக்கு மிகவும் முக்கியமானவை. யுத்தத்தின் பின் மக்கள் மத்தியில் உளச்சோர்வு, கவலை, வெறுப்பு அதிகரித்துள்ளது. இதனால் மது பாவனையும் அதிகரித்துள்ளது. குடும்ப உறுப்பினர்களில் காணாமற்போனவர்களின் தாக்கம் மற்றய உறுப்பினர்களின் மனதை மிகவும் பாதிக்கின்றது.

போரின் பின்னர் குடும்ப கட்டமைப்பு உடைந்துபோயுள்ளது. அவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளார்கள். உளச்சோர்வு, மன உளைச்சல் என்பன கொலஸ்ரோலை ஏற்படுத்தி விடுகின்றது. அண்மைய காலத்தில் பாரிசவாத நோயாளிகளின் அதிகரிப்புக்கு இது பிரதானமான காரணியாக காணப்படுகின்றது.

புனருத்தாரனம்

இலங்கையில் பாரிசவாத நோய்க்குரிய புனருத்தாரன வசதிகள் குறைவு. அதிலும் வடமாகாணத்தில் சிகிச்சை வழங்குபவர்கள் அதாவது பயிற்சி வழங்குபவர்கள் குறைவாக உள்ளனர். அதற்காக பயிற்சியை வழங்காது விட முடியாது. வீட்டிலுள்ள அங்கத்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் நோயாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது.

பாரிசவாத நோயாளிகளுக்கு சீரான உடற்பயிற்சி ஏன் தேவைப்படுகிறது

பாரிசவாத நோயாளிக்கு அதீத சிகிச்சை பிரிவில் உள்ள போதே, உடற்பயிற்சி ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. இதன் போது பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத மூளை தூண்டப்படுவதுடன் அதற்குரிய உடலின் பாகங்கள், முக்கியமாக தசைகள் நரம்புகள் மற்றும் மூட்டுப்பகுதிகள் தொடர்சியாக இயங்க இடமளிக்கிறது.

அத்துடன் கால்களில் பொதுவாக ஏற்படும் குருதியுறைவை தடுப்பதற்கும் சிறந்த தோல் சுகாதாரத்தை பேணவும் உதவுகின்றது. பாரிசவாத்ததின் தாக்கம் இருக்கும் நிலையில் தன்னியக்க உடற்பயிற்சிகளை ஊக்குவிப்பதுடன் பயிற்றுவிப்பவரின் உதவியும் தேவைப்படலாம்.

இந்நோயாளிகளின் அவயங்கள் பாதிப்பு, குறிப்பாக வழக்கமாக பிரயோகிக்கும் கைகள். இவை செயலிழக்கும் போது அவர் நாளாந்த கடமைகளான குளித்தல், துவைத்தல், சமைத்தல் கடமைகளை செய்ய முடியாமலிருக்கும்.

இவற்றை ஊக்குவிப்பதற்கு தொழில் வழி சிகிச்சை அளிப்பவரின் உதவி தேவைப்படலாம். இதே போன்று பேச்சு மொழித்திறன் இழந்தவர்கள், உணவு வழங்குவதில் சிரமமுள்ளவர்கள், பேச்சு வழிச்சிகிச்சை அளிப்பவரின் உதவி தேவைப்படலாம்.

பாரிசவாத நோயாளிகளுக்கு  அதி தீவிர சிகிச்சை பிரிவில் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது

பாரிசவாத நோயாளி ஒரே தடவையில் பல்வேறு வழிகளில் குறிப்பிட்ட காலப்பகுதியினுள் (நாலரை மணித்தியாலயத்திற்குள்) அவசரமாக சிகிச்சை அளிக்கப்படல் அவசியமாகும். இதன் போது வைத்தியர்கள் பின்வரும் காரணிகளை சீராக்குவதன் மூலம் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள்.

அதாவது, குருதியமுக்கத்தை சீராக்கல், குருதியில் கொலஸ்ரோல் மட்டத்தை கட்டுப்படுத்தல்,  ஊடலில் வெப்ப நிலையை சீராக்கல், போசனை நிலையை பேணுதல், சிறுநீரக தொழிற்பாட்டை கண்காணித்தல், கால்களின் சீரான இயக்கத்தை உறுதிப்படுத்தல், தோல் சுகாதாரத்தை பேணல் போன்றவற்றை சீராக்குவதன் மூலம் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவார்கள்.

பாரிசவாத நோயாளியை பூரண குணப்படுத்த வேண்டுமாயின் அதில் எம் ஒவ்வொருவரது பங்கும் உள்ளடங்கியுள்ளது. எமது கடமை உடனடியாக நாலரை மணித்தியாலயத்திற்குள் சிகிச்சை வழங்குவதாகும். இது தொடர்பாக மக்கள் அசண்டையீனமாக இருக்கிறார்கள். உடலில் ஒரு பக்கம் உணர்ச்சி குறைந்தால் அது சரியாகிவிடும் என நினைத்து வைத்தியரை நாடாமல் இருந்துவிடுகிறார்கள். இது அடுத்த தடவை வரும்போது பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எ

னவே உடனடியாக வைத்தியசாலையை நாடி சிகிச்சை பெற வேண்டும். நவீன உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எதையும் அறியாதவர்கள் போல் இருந்துவிடாது இது தொடர்பான விடயங்களை தேடியறிந்து வைத்தியசாலையை நாடி சிகிச்சை பெறவேண்டும். இதன் மூலம் நாம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும்.

தகவல் - யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்க தலைவர் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன், செயலாளர் ஆர்.சுரேந்திரகுமார், உதவி தலைவர் நளாயினி ஜெகதீசன், மற்றும் வைத்திய நிபுணர் கே.அஜந்தா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .