2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

'கஞ்சா கடத்துபவர்கள் உணர்ந்து திருந்தவேண்டும்'

Thipaan   / 2014 டிசெம்பர் 09 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செல்வநாயகம் கபிலன்


கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், அண்மையில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகளை பார்த்து தாங்களாகவே உணர்ந்து அவற்றை கைவிடவேண்டும் என காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 2க்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம். ஜஃப்வர், செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.

கடந்த காலங்களாக இடம்பெறும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகள் குறித்து அத்தியட்சகரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துக்கூறுகையில்,

கடல் மார்க்கமாக இடம்பெறும் கஞ்சா கடத்தலை தடுப்பதற்கு, விசேட கடலோர ரோந்து பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, மாதகல் கடலோர பகுதியில் இவ்விசேட பொலிஸ் குழு ரோந்து  நடவடிக்கையில் ஈடுபடும்
இந்த குழு பொதுமக்களுடன் இணைந்து சிவில் உடையில் தமது கடமைகளை கண்காணிப்பர். பொலிஸாரின் விசேட இரவு ரோந்து பணிக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.

தேவையேற்படின் இரவு நேரத்தில் திடீர் வீதித்தடைகளை அமைத்து, சந்தேகத்துக்கிடமான முறையில் பயணிக்கும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடமராட்சி கிழக்கு கடலோர பகுதியில் இருந்து, இளவாலை மாதகல்துறை வரை இவ்விசேட ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, அண்மையில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.

ஆயிரம் பொலிஸார் ஒரு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினாலும் பொதுமக்களின் உதவி இல்லாமல், பொலிஸாரால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டமுடியாது.

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலின் கீழ், கடலோர மக்களுக்கு தெளிவூட்டும் செயற்பாடுகள் எதிர்வரும் நாட்களில் கடலோர கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த செயற்பாட்டுக்கு கடற்றொழில் சமாச சங்கங்கள், மற்றும், கிராமஅலுவலர்களின் உதவிகள் பெறப்பட்டு, தெளிவூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அவதானம் செலுத்துங்கள். பிள்ளைகள், யாருடன் பழகுகிறார்கள், எங்கே செல்கிறார்கள் என்பது தொடர்பில் உன்னிப்பாக அவதானியுங்கள். உங்கள் பிள்ளைகளை இறை மார்க்க கடமைகள், கல்வி, விளையாட்டு, ஊடாக சிறந்த கல்விமானாய் உருவாக்கி சிறந்த பிரஜைகள் ஆக்குங்கள். 

சமுதாயத்தை சீரழிப்பதற்கென்று சில சக்திகள் பணத்துக்காக இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறான சட்டவிரோத செயற்பாட்டாளர்களிடம் இருந்து, உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது பற்றி பெற்றோர்களுக்கு நிறைய கடப்பாடு உள்ளது.

சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதனை அண்மையில் இடம்பெற்ற கடத்தல் முறியடிப்பு சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன. சட்டமும் ஒழுங்கும் சமூகத்தில் முன்னோக்கியே உள்ளது என தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .